தமிழகத்தில் எல்லைப் பகுதிகளில் கொட்டப்பட்ட கேரள மாநிலத்தைச் சார்ந்த மருத்துவக் கழிவுகளை நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழக எல்லையை தாண்டி அனுப்பி வைத்தனர்.
கேரளாவின் இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் இந்த வார தொடக்கத்தில் நெல்லையில் கேரளக் கழிவுகள் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டு இருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்திற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அதன்படி மருத்துவ கழிவுகளை கேரள அரசே அப்புறப்படுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து கேரளா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நெல்லையில் நேரில் வந்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன், கேரள மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இதனையடுத்து இன்று நெல்லையில் கொட்டப்பட்ட கேரள கழிவுகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கேரளாவில் இருந்து வந்த 30 பேர் கொண்ட குழு தற்போது 6 குழுக்களாக பிரிந்து குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக, நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டு சுமார் 18 லாரிகளில் மருத்துவக் கழிவுகள் ஏற்றப்பட்டு கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கழிவுகளை ஏற்றி செல்லும் லாரிகளானது தென்காசி மாவட்டம், தமிழக -கேரளா எல்லைப் பகுதியான புளியரை கோட்டைவாசல் பகுதியை கடந்து சென்றது.
source https://news7tamil.live/medical-waste-dumped-in-nellai-area-sent-to-kerala-at-midnight-under-heavy-police-security.html