கேரள மாநிலம் வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கோயில் நுழைவுப் போராட்டம் நினைவாக,1994-ல் தந்தை பெரியாருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. அந்த நினைவிடத்தை புனரமைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து வைக்கம் பகுதியில் உள்ள பெரியார் நினைவகத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். இதில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படக் கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர்களுக்கான மாடம், சிறுவர் பூங்கா போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
1994-ல் திறக்கப்பட்ட இந்த நினைவகம், தற்போது ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியைத் துவங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கேரளா சென்றார். இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் இன்று நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை திறந்து வைத்தார்.
இவ்விழாவில் பங்கேற்ற கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் எ.வ.வேலு, விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. , திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் அங்கு நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பெரியார் குறித்த புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
source https://news7tamil.live/the-renovated-periyar-memorial-in-vaikom-inaugurated-by-chief-minister-m-k-stalin.html