எஸ்.பி.சி பெந்தெகொஸ்தே சபைகளின் சார்பில், கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (டிச.18) பெத்தேல் மாநகரப் பேராலயத்தில் மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், "கிறஸ்துமஸ் என்றால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. கடந்தாண்டு ஒரு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்து, நான் கிறுஸ்துவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன் என கூறியதும் ஒட்டுமொத்த சங்கிகளுக்கும் வயிற்று ஏரிச்சல் ஏற்பட்டது. நான் இப்போது சொல்கிறேன். நான் இன்றும் மீண்டும் உங்கள் முன் சொல்லிக்கொள்கிறேன், நான் கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
நீங்கள் என்னை கிறிஸ்தவராக நினைத்தால் கிறிஸ்தவன், முஸ்லீமாக நினைத்தால்
முஸ்லீம், இந்து என்று நினைத்தால் இந்து; நான் எல்லாருக்கும் பொதுவானவன்.
அப்படித்தான் எப்போதும் இருப்பேன். அனைத்து மதங்களும் அன்பை தான் போதிக்கின்றன. மதத்தை வைத்து ஆதாயம் தேடுபவர்கள் வெறுப்பை பரப்புவார்கள்.
வெறுப்பை பரப்புபவர்கள் எப்பொழுதும் உண்மையை பேச மாட்டார்கள். உண்மைகளை பேசி வெறுப்பை பரப்ப முடியாது. அதனால் தான் அவர்கள் தொடர்ந்து பொய்யை நம்பி, பொய்யை மட்டும் பரப்புகின்றனர்.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் சமீபத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு கருத்துகளை பேசினார். அவரை நீக்க நாம் குரல் கொடுத்தோம். பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் தீர்மானம் கொண்டு வந்தனர்.
திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அத்தீர்மானத்தை ஆதரித்தனர். ஆனால், அதிமுக உறுப்பினர்கள் அத்தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அரசியலமைப்புக்கு எதிரான கருத்துகளை பேசிய நீதிபதியை பதவியை விட்டு நீக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் துணிச்சல் கூட அதிமுகவுக்கு இல்லை" என்று பேசினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/udhayanidhi-stalin-christmas-cbe-speech-8495679