வெள்ளி, 13 டிசம்பர், 2024

ஜாமீனில் வெளியே வந்த மறுநாளே அமைச்சராக பொறுப்பேற்றது ஏன்? மீண்டும் சுப்ரீம் கோர்ட் கேள்வி

 

செந்தில் பாலாஜி வழக்கு

மீண்டும் உச்சநீதிமன்றம் கேள்வி

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த அடுத்த நாளே அமைச்சராக பதவி ஏற்றார். இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அபே ஓகா ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தார். 

கைதாகி ஜாமீனில் வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், பல வழக்குகள் நிலுவையில் உள்ள போது எவ்வாறு அமைச்சராக பொறுப்பேற்க முடியும் என உச்சநீதிமன்ற நீதிபதி அபே ஓகா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜாமினில் வெளியே வந்த செந்தில்பாலாஜி அடுத்த நாளே அமைச்சராக பதவி ஏற்ற நிலையில் அவர் ஏற்கெனவே வகித்து வந்த மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையே வழங்கப்பட்டது. அவர் ஜாமீனில் வந்ததும் ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எதிர்த்து வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவானது நீதிபதி அபே ஓகா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி ஓகா, "மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது. பல வழக்குகள் நிலுவையில் உள்ள போது அமைச்சராக எப்படி பொறுப்பேற்க முடியும்? நாங்கள் ஜாமீன் கொடுத்த அடுத்த நாளே நீங்கள் அமைச்சராக பொறுப்பேற்றது எந்த வகையில் நியாயமானது ? என்னதான் நடக்கிறது, இதனால் சாட்சிகள் அச்சப்பட வாய்ப்பு உள்ளது" என நீதிபதி அபே ஓகா கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்நிலையில் மீண்டும் நீதிபதி ஓகா கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் கடந்த முறை அவகாசம் வழங்கியும் ஏன் பதில் அளிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியது. வரும் புதன்கிழமைக்குள் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு காரணம் உள்ளிட்டவற்றை கூற வேண்டும் என கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/supreme-court-raise-questions-to-senthil-balaji-8437486