சனி, 14 டிசம்பர், 2024

மக்களவையில் முதல் உரை; நேரு – காந்தி விமர்சனத்தை கையிலெடுத்த பிரியங்கா;

 

லோக்சபாவில் வெள்ளிக்கிழமை தனது முதல் உரையை ஆற்றிய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, நரேந்திர மோடி அரசாங்கம் நாட்டின் வளங்களையும் செல்வத்தையும் தொழிலதிபர் கெளதம் அதானியிடம் ஒப்படைப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், அச்சச்சூழலை உருவாக்குதல், பேச்சுரிமையை முடக்குதல், கருத்து வேறுபாடுகளைக் கட்டுப்படுத்துதல், எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்தல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கவிழ்க்க பணத்தைப் பயன்படுத்துதல் போன்றவற்றை பா.ஜ.க அரசு செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

வயநாடு எம்.பி.யான பிரியங்கா காந்தி தனது தாத்தாவும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு மீதான பா.ஜ.க.,வின் அவ்வப்போதான தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயங்கவில்லை.

தனது 32 நிமிட உரையில், நேரு மற்றும் அவரது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி செய்த பங்களிப்புகளை, குறிப்பாக முன்னாள் பிரதமர் அமைத்த பொதுத்துறை நிறுவனங்களை நினைவு கூர்ந்தார். பாடப்புத்தகங்கள் மற்றும் உரைகளில் இருந்து நேருவின் பெயரை நீக்கலாம் ஆனால் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதில் அவரது பங்கை அழிக்க முடியாது என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டார்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் கடந்த காலத்தை பற்றி பேசுகின்றனர். நேரு என்ன செய்தார் என்று கேட்கிறார்கள்... நிகழ்காலத்தைப் பற்றி பேசுங்கள். நாட்டுக்கு சொல்லுங்கள்... என்ன செய்கிறீர்கள் என்று. உங்கள் பொறுப்பு என்ன? எல்லா பொறுப்பும் ஜவஹர்லால் நேருவுக்குத்தானா?” என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடியைப் பற்றி பேசுகையில், மோடி அரசியலமைப்பின் முன் அடிக்கடி தலைவணங்குகிறார், ஆனால் சம்பல், ஹத்ராஸ் மற்றும் மணிப்பூரில் இருந்து வரும் நீதியின் கூக்குரல்களுக்கு கண்ணை மூடிக்கொண்டார். "இந்திய அரசியலமைப்பு சட்டம் சங் பரிவாரின் சட்டம் அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்" என்று பிரியங்கா காந்தி கூறினார்.

சாமானியனாக உடை உடுத்தி சந்தைகளில் சுற்றித் திரிந்து குறைகளையும் மக்களின் கருத்துக்களையும் கேட்கும் ஒரு அரசனைப் பற்றிய கதைகளை அனைவரும் கேள்விப்பட்டிருப்பார்கள் என்று பிரியங்கா கூறினார். "இன்றைய ஆட்சியாளருக்கு உடை மாற்றுவது பிடிக்கும்... ஆனால் அவர் பொதுமக்கள் மத்தியில் செல்லவோ அல்லது விமர்சனங்களைக் கேட்கவோ துணிவதில்லை" என்று பிரியங்கா விமர்சித்தார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த காலத்தில் நடந்த அரசியல் முன்னேற்றங்களை விவரித்துள்ளார், மேலும், “அவர் 1975 (அவசரநிலை) பற்றி பேசினார்... நீங்களும் ஏன் கற்றுக்கொள்ளவில்லை?... உங்கள் தவறுகளுக்காக நீங்களும் மன்னிப்பு கேட்கிறீர்கள். நியாயமான தேர்தல் நடந்தால், விஷயங்கள் தெளிவாகிவிடும்,” என்று பிரியங்கா காந்தி கூறினார். 


source https://tamil.indianexpress.com/india/lok-sabha-debut-priyanka-addresses-nehru-gandhi-criticism-emergency-8437887