செவ்வாய், 24 டிசம்பர், 2024

மத்திய அரசின் நடவடிக்கை தமிழ்நாட்டிற்கு பொருந்தாது - அமைச்சர் அன்பில் மகேஸ்

 Min Anbil

அன்பில் மகேஸ் அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் தற்போது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆல்பாஸ் எனப்படும் கட்டாய தேர்ச்சி முறை நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்துள்ள நிலையில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

மாணவர்களின் கற்றல் கிறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் உடனே மறு தேர்வு நடத்தி மாணவர்களை தேர்ச்சி அடைய வழி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதும் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இது பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இந்த சட்ட திருத்தம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பின்பற்றப்படாது, ஆல்பாஸ் முறையே தொடரும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் அறிக்கையில் கூறியதாவது, தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் தொடர்ந்து தடையின்றி கல்வி பயின்றிட ஏதுவாக, எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேரச்சி வழங்கப்படும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தினை திருத்தம் செய்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களில் மறுதேர்வு முறையையும், அதிலும் தேர்சசி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயிலும் வகையிலும் நடைமுறை கொண்டுவர  மத்திய அரசு தீர்மானம் செய்துள்ளது.

மேலும், "5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் அனைவரும் தேர்ச்சி நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. குழந்தைகள் தடையின்றி எட்டாம் வகுப்பு வரை கல்வி பெறுவதில் ஒரு பெரிய தடைக்கல்லை மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தி உள்ளது உண்மையிலேயே வருந்ததக்கது. 

மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய அரசுப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் கல்வியாளர்களும் எந்த வகையிலும் குழப்பமடையத் தேவையில்லை. 

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தற்போதுள்ள் தேர்ச்சி நடைமுறையே தொடரும் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/anbil-mahesh-announcement-for-central-government-education-all-pass-decision-in-tamil-8556102