சனி, 21 டிசம்பர், 2024

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் – காவல்துறை அறிவுறுத்தல்!

 

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஓட்டல்கள், விடுதிகள், கடற்கரை வீடுகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்துக் காவல் துறையினர் அவற்றின், உரிமையாளர்களை அழைத்து திருமண மண்டபத்தில் பேசியுள்ளனர். மாமல்லபுரம் துணை கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரவி அபிராம் தலைமையில், அப்பகுதி காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் முன்னிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் சாக்கில் சுற்றுலா வரும் பெண்களைக் கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்களில் டிசம்பர் 31-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எந்த ஓட்டல்களிலும் இரவு 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது, குறிப்பாகக் கடற்கரை ரிசார்ட்களில் தங்கி உள்ளவர்கள் இரவு 12 மணிக்கு மேல் அறைகளை விட்டு வெளியே வரக் கூடாது, பின்புறம் உள்ள கடற்கரை பகுதிக்குச் செல்ல அனுமதிக்கக்கூடாது, அங்குள்ள கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் வரவேற்பு அறையில் உள்ள சிசிடிவி கேமரா கண்டிப்பாக இயங்க வேண்டும். அறை எடுத்து கேளிக்கை கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு வரும் விருந்தினர்களிடம் ஆதார அட்டை, தேர்தல் வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை பெற்றுக்கொண்டே ஓட்டல் நிர்வாகங்கள் அறைகள் ஒதுக்கித் தரவேண்டும். தங்குபவர்களின் செல்போன் நம்பரைக் கண்டிப்பாக அவர்களிடம் வாங்கி நட்சத்திர விடுதி பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் போன்ற பல விதிமுறைகளை வலியுறுத்தினர்.

அப்போது புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றிய சில சந்தேகங்களையும் ஓட்டல் மேலாளர்கள் காவல்துறையிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

source https://news7tamil.live/entertainment-programs-should-not-be-held-on-east-coast-road-police-department-notice.html