கட்டுரையாளர்: தவ்லீன் சிங் TAVLEEN SINGH
2024-ன் எனது கடைசிக் கட்டுரை இது, மிக முக்கியமான அரசியல் திருப்பங்கள் என்று நான் நம்பியவைகளைப் பற்றி எழுதுவதே எனது நோக்கமாக இருந்தது. என் பார்வையில், லோக்சபா தேர்தலில் கிடைத்த வெற்றியைச் சிதறடித்த, காங்கிரஸைக் கட்டுப்படுத்தும் சகோதர, சகோதரிகளின் வியக்கத்தக்க திறமையும் பொறுப்பற்ற தன்மையும் பற்றியதைத் தான் (எழுதுவதாக இருந்தேன்). ஆனால் இது காத்திருக்கலாம். மாறாக, டாக்டர் மன்மோகன் சிங்கின் நினைவாக அவருக்கு தனிப்பட்ட முறையில் அஞ்சலி செலுத்த நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் ஒரு உண்மையான அஞ்சலியையே விரும்பியிருப்பார், எனவே நான் கட்டுரையின் தொடக்கத்திலேயே முதலில் அவரைப் பெரிதும் போற்றினேன் என்பதையும், ஆனால் அவருடைய இரண்டாவது பதவிக்காலத்தில் அவர் என்ன ஆகிவிட்டார் என்று மிகவும் ஏமாற்றமடைந்தேன் என்பதையும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.
ஆங்கிலத்தில் படிக்க: Tavleen Singh on Manmohan Singh: The man who changed India
நான் அவரை முதன்முதலில் சந்தித்தது குஷ்வந்த் சிங்கின் விருந்து ஒன்றில்தான். இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் அதிர்ஷ்டசாலிகளுக்கு, அங்கு எப்பொழுதும் பிரபல விருந்தாளிகளே அதிகம் இருப்பார்கள் என்பது தெரியும். குஷ்வந்தின் விருந்தில், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் விருந்தினர்களை நீங்கள் சந்திக்கலாம். கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட்ட நேர வரம்பு என்பது, எங்கள் புரவலர் சோர்வடைந்து விட்டால் அனைத்தும் நிறுத்தப்பட்டு விடும். இது போன்ற ஒரு விருந்தில் 1990-களில் டாக்டர் மன்மோகன் சிங்கை நான் சந்தித்தேன், அவர் லைசென்ஸ் ராஜ்-ஐ தகர்க்க ஆரம்பித்து, அவரது சீர்திருத்தங்களால் வந்த பொருளாதார சுதந்திரத்தின் போதையில் இந்தியா திளைத்திருந்த சிறிது காலத்திற்குள்ளாகவே இந்த சந்திப்பு நிகழ்ந்தது. எனது வாழ்நாளின் பெரும்பகுதியை, இந்தியாவை ஒரு பொருளாதாரச் சிக்கலான சூழலுக்கு மாற்றிய அந்த சோசலிசப் பத்தாண்டுகளில் கழித்த நான், விரைவில் வெளிப்பட்ட மாற்றங்களைக் கண்டு மகிழ்ந்து போனேன், அன்று மாலை நாங்கள் நடத்திய சுருக்கமான உரையாடலில் நான் அவரிடம் சொன்னது இதுதான் என்று நினைக்கிறேன்.
இதற்குப் பிறகு, நாங்கள் அவ்வப்போது சந்தித்தோம், நான் பார்க்கும் மாற்றங்கள் மற்றும் நான் பார்க்க விரும்பும் மாற்றங்களைப் பற்றிப் பேசுவதற்கு அவர் என்னை ஊக்குவித்தார். மிக முக்கியமான பொருளாதார சீர்திருத்தம் நமது செயலிழந்த கல்வி முறையை சீர்திருத்துவதாக இருக்கும் என்று நான் அடிக்கடி குறிப்பிட்டேன், அவர் ஒப்புக்கொண்டார், ஆனால் இந்தத் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவது ஏன் இவ்வளவு கடினமானது என்பதை அவர் கடைசி வரை விளக்கவேயில்லை. அவர் பிரதமரான பின்பு, அவருடன் தனிப்பட்ட முறையில் உரையாடும் வாய்ப்பு அரிதாகவே கிடைத்தது, ஆனால் நான் அவரின் முதல் பதவிக் காலத்தின் ஒரு ரசிகையாகவே இருந்தேன், ஏனெனில் அவர் அத்தகைய புரட்சியை கொண்டு வந்தார், மேலும் 2006-வாக்கில் உலகமே இந்தியா விரைவில் சீனா அளவிற்கு வளர்ந்து விடும் என்று நம்பியது. நமது நடுத்தர வர்க்கம் பெரியதாகவோ பணக்காரர்களாகவோ இல்லை, ஆனால் நடுத்தர வர்க்கம் இருந்தது ஒரு அதிசயம், அது மிகுந்த ஆசைகளுடன் வளர்ந்து வந்தது என்பது இன்னொரு அதிசயம்.
2006 வருடத்தை நான் குறிப்பிடக் காரணம், அந்த ஆண்டு டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டத்தில், இந்தியா நட்சத்திரமாக விளங்கியது, என்பது எனக்கு நினைவிருக்கிறது. இந்தியத் தொழிலதிபர்கள் புதிய நம்பிக்கையுடன் காணப்பட்டனர், காபி மற்றும் இரவு விடுதிகளில் இருந்து பாலிவுட் இசை கேட்டது, மேலும் இந்திய மசாலாப் பொருட்களின் நறுமணம் அந்தப் பனிக் காற்றில் வீசியது. ஆனால் சோனியா காந்தி தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு பழைய சோசலிசக் கட்டுப்பாடுகளையும், செயலிழந்த சிந்தனைகளையும் திரும்பக் கொண்டுவரப் போகிறார் என்பதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தெரிந்தன. அவரது தேசிய ஆலோசனைக் குழு (என்.ஏ.சி) அமைச்சரவையை விட சக்திவாய்ந்ததாக மாறியது மற்றும் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ (100 நாள் வேலைத் திட்டம்) மற்றும் உணவு பாதுகாப்பு சட்டம் போன்ற யோசனைகளைத் திணித்தது. அதே நேரத்தில், தனியார் துறை மீண்டும் பைத்தியக்காரத்தனமான கட்டுப்பாடுகள், வரி சோதனைகள் மற்றும் அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது.
டாக்டர் மன்மோகன் சிங் இரண்டாவது முறையாக பிரதமராக இருந்தபோதுதான் அவர் மீது எனக்கு மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டது. தனது வேலையை எப்போது வேண்டுமானாலும் ராகுல் காந்தியிடம் விட்டுக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைவேன் என்று பதவி ஏற்ற நாள் முதலே அவர் குறிப்பிட்டிருந்தது, பிரதமர் என்ற உயரிய பதவியின் பெருமையை நிறையவே குறைத்து விட்டது. எந்தப் பொறுப்பும் இன்றி, சோனியா காந்தி நடைமுறைப் பிரதமர் போன்று செயல்பட்ட காரணத்தால் அந்தப் பதவியின் மதிப்பு ஏற்கனவே தாழ்த்தப் பட்டிருந்தது. சோனியாவும் அவரது என்.ஏ.சி.,யும் எல்லா முக்கிய முடிவுகளையும் எடுத்ததால், டாக்டர் மன்மோகன் சிங்கின் அரசாங்கம் பலவீனமடைந்தது. அரசு இயற்றிய அரசாணையை ராகுல் காந்தி கிழித்தெறிந்த அந்த செய்தியாளர் சந்திப்பு மக்களின் நினைவில் பதிந்த விட்ட ஒன்றாகும். ஆனால் பிரதமர் அலுவலகத்தை இழிவுபடுத்தும் நயவஞ்சகமான மேலும் பல உதாரணங்கள் கவனிக்கப்படாமலே போய்விட்டன.
டாக்டர் மன்மோகன் சிங் ஏன் தன்னை அவமானப்படுத்த அனுமதித்தார் என்று நான் அடிக்கடி ஆச்சரியப்பட்டிருக்கிறேன், மேலும் இந்த விஷயங்களைப் பற்றி அடிக்கடி என் கட்டுரைகளில் எழுதியும் இருக்கிறேன். டாக்டர் மன்மோகன் சிங்கின் அவமானத்தைப் பற்றி ஒரு நண்பரிடம் நான் பேசிக் கொண்டிருந்த பொழுது தான் அதை வேறு கோணத்தில் பார்க்க முடிந்தது. அந்த நண்பரின் கருத்தின்படி டாக்டர் மன்மோகன் சிங் இந்த நாட்டிற்கு தான்பட்ட கடமையைக் கருத்தில் கொண்டு தனது இரண்டாவது பதவிக் காலத்தில் தனது பெருமையைத் தியாகம் செய்திருக்கிறார். ஒருவேளை, என் நண்பர் கூறியதுபோல், அவர் பதவியில் தொடராமல் இருந்திருந்தால், (அவரால் தொடங்கப்பட்ட) விஷயங்கள் மிகவும் மோசமாகிவிடக்கூடும், அது பயங்கரமானது என்று அவர் நம்பியிருக்கலாம்.
சாத்தியம்தான். ஆனால், இந்த பிரதமர் பதவி தரக் குறைவாக்கப் பட்டதை சாதாரண இந்தியர்கள் கவனிக்காமல் விடவில்லை. 2014 மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோடி பாரதிய ஜனதா கட்சிக்கு முதல் தடவையாக, முழுப் பெரும்பான்மையைப் பெற்றுத் தந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும், ஏனெனில் அந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் பேசியவர்கள் ஒரு வலுவான பிரதமர் வேண்டும் என்று கூறினார்கள். தவிரவும், சோனியா காந்தியால் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு ஒப்புக்கொண்டதன் மூலம், டாக்டர் மன்மோகன் சிங்கால் என்ன செய்ய முடியும் மற்றும் செய்ய முடியாது என்ற வரம்புகள் இருந்தன என்பதும் உண்மைதானே.
அவர் தனது குறைபாடுகளுக்காக அல்லாமல், அவரின் பொருளாதார சீர்திருத்தங்களால் இந்தியாவில் அவர் கொண்டு வந்த உன்னதமான மாற்றங்களுக்காக நினைவு கூரப்படுவார் என்பதே இன்றைய யதார்த்தம். இவரின் இந்த சாதனைகளால், அவர் தனது வாழ்நாளில் அவருக்குக் கிடைக்கப் பெற்றதை விட, வரலாறு அவரைக் கருணையுடன் நடத்தும் என்னும் அவரின் நம்பிக்கை முற்றிலும் உண்மையாகும்.