/indian-express-tamil/media/media_files/2026/09/27/anbil-hc-2026-09-27-23-56-06.jpg)
ரூ.100 கோடி மோசடி வழக்கில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் அறிக்கையை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு பதிவு செய்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
வழக்கு பின்னணி என்ன?
கடந்த ஆட்சிக் காலத்தில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளிடம் இருந்து பள்ளித் தரம் உயர்த்துவதற்கான அனுமதி, நிரந்தர அங்கீகாரம் மற்றும் கட்டட வரைபட ஒப்புதல் போன்ற சேவைகளை பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.பதிவுசெய்யப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் தலைவரான டி.சி. இளங்கோவன், கடந்த ஜூன் 23, 2026-ல் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ. அமல்ராஜிடம் இது தொடர்பாகப் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில்: பதிவு செய்யப்படாத ஒரு தனியார் பள்ளி சங்கத்தின் தலைவரான பி.டி. அரசகுமார் என்பவர், அன்றைய ஆளுங்கட்சி மற்றும் அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறிக்கொண்டு, பள்ளி நிர்வாகிகளிடம் பல கோடி ரூபாயைச் சுருட்டியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
முத்துக்கமார், ஜி.ஆர்.ஸ்ரீதர், பழனியப்பன், சந்திரசேகரன், தினேஷ், ஐன்ஸ்டீன், சுப்பையா, சுபா எலக்ஸ் சுப்பிரமணியம், சுசீந்திரன், தெய்வசிகாமணி, சென்னிஅப்பன், ஜனகரத்தினம் மற்றும் 'பேங்க்' சுப்பிரமணியம் ஆகிய 13 நபர்கள் இந்த மோசடியில் பி.டி. அரசகுமாருக்குக் கூட்டாளிகளாகச் செயல்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் அன்றைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பங்களிப்பு குறித்தும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார்தாரர் வலியுறுத்தியிருந்தார்.
தீவிரமடைந்த மத்தியக் குற்றப்பிரிவு விசாரணைபுகாரின் அடிப்படையில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் ஜூன் 27, 2026 அன்று முதன்மை குற்றவாளியான பி.டி. அரசகுமாரைக் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து, ஜூலை 11 அன்று அவர் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. (இந்தக் குண்டாஸ் தடுப்புக் காவலை எதிர்த்து அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது).
விசாரணையின் அடுத்தகட்டமாக, கடந்த செப்டம்பர் 16 அன்று சென்னை மற்றும் திருச்சியில் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்குத் தொடர்புடைய 9 இடங்களில் மத்தியக் குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், செப்டம்பர் 18-ல் நேரில் ஆஜராகுமாறு அவருக்குச் சம்மனும் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் மனு
இந்நிலையில்தான், தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.முன்னதாக, வழக்கின் அசல் எஃப்.ஐ.ஆர் நகலைத் தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த இடைக்கால மனுவை, நீதிபதி வி. லட்சுமிநாராயணன் திங்கள்கிழமை (செப்டம்பர் 28, 2026) விசாரணை செய்யவுள்ளார்.
தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கங்களுக்கு இடையே உள்ள சிவில் சர்ச்சைக்குக் குற்றவியல் சாயம் பூசப்படுவதாக எதிர்த்தரப்பு வாதிட்டு வரும் நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது அரசியல் மற்றும் கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/anbil-mahesh-pooyamozhi-moves-madras-high-court-quash-fir-100-crore-fraud-case-12582593





