ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

பருவமழை முன்னெச்சரிக்கை: 1,256 கேமராக்கள், வெள்ள அளவீட்டு கருவிகளுடன் சென்னையைக் கண்காணிக்க புதிய திட்டம்

 

New Project

புகைப்படம் - தி இந்து

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி தனது ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை  மேம்படுத்தும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளுக்காக ரூ.98.25 கோடி மதிப்பீட்டிலான பெருந்திட்டத்தை அறிவித்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2020-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த மையத்தின் முந்தைய பராமரிப்பு ஒப்பந்தம் 2025 நவம்பரில் நிறைவடைந்தது. இந்நிலையில், வரும் ஜூன் 1 முதல் நவம்பர் 30, 2026 வரையிலான காலத்திற்கு இடைக்காலப் பராமரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது இதன் அடுத்த கட்டமாக, 'ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் 2.0' என்ற பெயரில் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டு மையத்தையும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நகரின் கண்காணிப்பு வசதிகள் பெருமளவில் அதிகரிக்கப்பட உள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள 668 கேமராக்களுடன் மேலும் 588 புதிய கேமராக்கள் இணைக்கப்பட்டு, மொத்த கேமராக்களின் எண்ணிக்கை 1,256-ஆக உயர்த்தப்படும். மேலும், மழைக்கால பாதிப்புகளை உடனுக்குடன் அறிந்து நடவடிக்கை எடுக்க ஏதுவாக 65 மழைமானிகள், 46 வெள்ள உணரிகளுடன் கூடுதலாக 40 வெள்ள அளவீட்டு கருவிகள் அமைக்கப்படவுள்ளன.

இதுமட்டுமன்றி, சென்னை மாநகராட்சியின் நீர்ரேற்றும் பம்புகளைக் கண்காணிக்க 159 ஐஓடி சார்ந்த அமைப்புகள், 101 தகவல் காட்சிப் பலகைகள் (VMD), 57 ரோந்து வாகனங்களுக்கான ஜிபிஎஸ் அமைப்புகள், 17 தானியங்கி பூம் பேரியர்கள் மற்றும் 50 ஸ்மார்ட் கம்பங்கள் ஆகியவை இந்த புதிய அமைப்பின் கீழ் கொண்டுவரப்படும். மேலும், நகரின் பல்வேறு பகுதிகளை திறம்பட கண்காணிக்க 3 மண்டல அளவிலான கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாட்டு மையம், நிகழ்நேரத் தகவல்கள், முன்எச்சரிக்கை அமைப்புகள், இணையப் பாதுகாப்பு மற்றும் கிளவுட்  உள்கட்டமைப்பு வசதிகளுடன் இயங்கும். ஒரே நிறுவனத்தின் மூலம் 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கப்படவுள்ள இத்திட்டத்திற்கான இறுதி நிதியளவு, திறந்தவெளி போட்டி டெண்டர் முறையின் மூலம் முடிவு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/gcc-plans-rs-9825-crore-overhaul-of-integrated-command-and-control-centre-12581877