புதன், 29 ஏப்ரல், 2015

கோடை காலத்தில்
அதிகம் வியர்க்கும். அதனால் உடலின் நீர்ச்சத்து குறைந்து தாகம் எடுக்கும். அப்போது நாம் தண்ணீர், குளிர்பானத்தை அருந்துவோம். ஐஸ்கிரீம் சாப்பிடுவோம். அவை தூய்மையானதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் தும்மல் வரும், சளி பிடிக்கும். காய்ச்சல் நோய் தாக்கும். கோடையில், நமது தோல்கள் அதிகம் வெயில் தாக்குதலுக்கு ஆளாவதால், தோலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால் தொடை, அக்குள், கை, கால்களில் அரிப்பு ஏற்பட்டு கொப்பளங்கள், புண் ஏற்படும்.
அதுமட்டுமின்றி அசுத்தமான தண்ணீரை குடித்தால், ஈ மொய்த்த பண்டங்களை வாங்கி உண்ணுவதால் வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, டைபாய்டு காய்ச்சல் வரக்கூடும். அத்துடன் பெரியம்மை, சின்னம்மை, மணல்வாரி, பொண்ணுக்கு வீங்கி போன்ற அம்மை நோய்கள் தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தப்பிக்கும் வழிமுறைகள்
பெரியவர்கள் முடிந்தவரை பகலில் வெளிவேலைகளை குறைத்து கொள்வதுடன், வெயிலில் நடந்தால் குடை பிடித்து நடக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் கிறுகிறுப்பு ஏற்பட்டு மயக்கம் வந்து விடும். சிறுவர்களை, முடிந்தவரை நிழலில் விளையாட சொல்லலாம்.
வியர்க்குறு தாக்கினால் அதற்குரிய பவுடரோ அல்லது இளநீரில் சந்தனம், நுங்கு இவற்றை கலந்து உடலில் பூசலாம். கோடை காலத்தில் முடிந்தவரை நுங்கு, இளநீர், நீர்சத்துள்ள பழங்கள், பழச்சாறுகள் அருந்த வேண்டும். பருத்தி ஆடைகள் வியர்வையை நன்கு உறிஞ்சும் என்பதால் பருத்தியால் ஆன ஆடைகளை அணிய வேண்டும்.
உணவில் காரத்தை குறைத்து கொள்ள வேண்டும். வீட்டில் மண்பானை வைத்து குளிர்ந்த நீரை பருக வேண்டும். தாகம் எடுக்கும் போது அடிக்கடி தண்ணீரை மட்டும் குடிக்காமல் சிறிதளவு வெல்லத்தை சாப்பிட்டு விட்டு தண்ணீர் அருந்தலாம். இதனால் உடலுக்கு இரும்புச்சத்துடன் கூடிய உடனடி சக்தி கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
--–
(பாக்ஸ்) தாது உப்புகள் குறைந்தால்...
உடலில் இருந்து அதிகம் வியர்வை வெளியேறும் போது தாகம் ஏற்படும். அதனால் சிலர் நிறைய தண்ணீரை பருக வேண்டும் என்பார்கள். அது முற்றிலும் தவறு. அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பெரிய சக்தி ஒன்றும் கிடைத்து விடாது. வியர்வையில் உடலில் இருக்கும் பொட்டாசியம், சோடியம் போன்ற தாது உப்புகளும் வெளியேறும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு அதிகளவில் தாது உப்புகள் வெளியேறினால் சதை பிடிப்பு மற்றும் வேறு பல பிரச்சினைகளுக்கும் உடல் ஆளாகும். அதை தவிர்க்க, மோர், இளநீர், புதியதாக தயாரிக்கப்பட்ட பழச்சாறு, உப்பும், சர்க்கரையும் கலந்த தண்ணீர் இவற்றை அருந்துவது மிகுந்த பயன் கிடைக்கும்.