சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.
வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.
ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும். இதற்கு நல்ல கை மருத்துவம் உள்ளது. மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்.
சில பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு, வெள்ளைப்பாடு ஆகியவை குணமாக, மருதாணி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலந்து இருவேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டால் விரைவில் குணம் கிடைக்கும். ஆனால், இதனை உண்ணும் போது உணவில் புளியை சேர்த்துக் கொள்ளக் கூடாது.
உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும். இதேப்போல காலில் ஆணி ஏற்பட்டவர்கள் அந்த இடத்தில் நசுக்கிய பூண்டை வைத்துக் கட்டி வந்தாலும் குணம் கிடைக்கும்.
பல இடங்களில் பல வகையான உணவுகளை உட்கொண்டு நமது வயிற்றைக் கெடுத்து வைத்திருக்கிறோம். அப்படி செய்வதால் வயிற்றுக் கடுப்புக்கு ஆளாவதும் நாம்தான். அதற்கு மருந்து இலந்தை இலை மற்றும் பட்டையில் உள்ளது. இலையையும், பட்டையையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாய் நசுக்கி 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி 100 மில்லியாக வற்றியதும் குடித்து வர கழிச்சலும், ரத்தம் கலந்து போவதும் குறையும். வயிற்றுக் கடுப்புக்கு இது ஒரு மாமருந்தாக அமையும்.
இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு, தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
நீர் அடைப்பு, நீர்க்கடுப்பு, நீர்க்கட்டி நீங்க பாட்டி வைத்தியம்:
கொடிப்பசலைக் கீரை, கத்தரி இலை இரண்டையும் சம அளவு (ஒரு கைப்பிடி) எடுத்து கஷாயமாக்கி வடிகட்டி நான்கு சிட்டிகை வெங்காரபஸ்பத்தை கலக்கிக் குடித்தால் நீர் அடைப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.
முளைக்கீரை சாற்றில் உளுந்தை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்.
பசலைக் கீரைச் சாறில் பார்லி, சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து உலர்த்திப் பொடி செய்து, அதைக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவை குணமாகும்.
பருப்புக் கீரை சானமும் 60 மி.லி. அளவில் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.
கொடிப்பசலைக் கீரைச் சாறு ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் சிறிது கற்கண்டு சேர்த்துக்கொடுத்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு குணமாகும்.
முள்ளிக்கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு போன்றவை மறையும்