7 4 2022 தென்னாப்பிரிக்கா பயண வரலாற்றை கொண்ட 50 வயதான பெண்ணுக்கு, புதிய XE வகை கொரோனா பாதிப்பு இருப்பதாக மும்பை மாநகராட்சி நேற்று(ஏப்ரல்.6) தகவல் வெளியிட்டது.
குளிர்காலத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை ஏற்படுத்திய Omicron இன் துணை வகையான XE, இதுவரை இந்தியாவில் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கிடையில், XE வகை கண்டறியப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பு, மக்களிடையே அடுத்த அலைக்கான ஆரம்பம் என்கிற அச்சத்தை எழுப்பியது.
ஆனால், மும்பை நோயாளிக்கு XE வகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகவில்லை என மத்திய சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது. முதற்கட்ட தகவலில், சந்தேகித்திற்கிடமான நோயாளியின் மாதிரியை சோதனை செய்ததில் XE வகை தொற்று தென்படவில்லை என தெரிவித்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் உறுதியான தகவல் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
XE வகை கொரோனா என்றால் என்ன?
இந்தாண்டில் கண்டறியப்பட்ட 90 சதவீத கொரோனா பாதிப்புகளுக்கு காரணமான ஒமிக்ரானில், BA.1 மற்றும் BA.2 என இரண்டு துணை வகைகள் உள்ளது. அதில், BA.3 என்கிற துணை வகையும் உள்ளது ஆனால், அவை தென்படுவது மிகவும் அரிதானது ஆகும்.
ஆரம்ப நாள்களில், BA.1 வகை கொரோனா அதிகளவில் பரவியது. இருப்பினும், இந்தியாவில் மூன்றாம் அலையின்போது, BA.2 துணை வகை ஆதிக்கம் செலுத்தியது. BA.2 ஆனது BA.1 ஐ விட சற்று அதிகமாக பரவக்கூடியது என்று கண்டறியப்பட்டது. ஆனால், அவை ஆபத்தானவை கிடையாது. உலக சுகாதார அமைப்பு கூற்றுப்படி, கடந்த இரண்டு மாதங்களில், உலகம் முழுவதும் பரவிய மாறுபாடாக BA.2 வகை உள்ளது. கிட்டத்தட்ட 94 சதவீத கொரோனா பாதிப்புகளுக்கு, BA.2 வகை காரணமாக உள்ளது. BA.2 வகை பாதிப்பு தென்படுவது கணிசமாக குறைந்துள்ளது.
XE வகை கொரோனா, மறுசீரமைப்பு மாறுபாடு ஆகும். ஏனெனில், அதில் BA.2 மற்றும் BA.1 வகைகளின் பிறழ்வுகள் உள்ளன. முதன்முதலில் இங்கிலாந்தில் இந்த வகை கொரோனா தென்பட்டது. தற்போது வரை, பல்வேறு நாடுகளில் 600க்கும் மேற்பட்டோருக்கு XE வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பு மாறுபாடு தென்படுவது, அரிதான நிகழ்வு அல்ல. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறியப்பட்ட மாறுபாடுகளின் பிறழ்வு பண்புகளைக் கொண்ட மாறுபாடுகள் எல்லா நேரத்திலும் தென்படும். சொல்லப்போனால், டெல்டா மற்றும் ஒமிக்ரான் பிறழ்வுகளை கொண்ட கொரோனா மாறுபாடும் தென்பட்டுள்ளது.
வைரஸ்கள் மற்றும் பிற உயிரினங்களில் மரபணு மாற்றங்களின் சீரற்ற செயல்முறை தொடர்ந்து நடைபெறுகிறது. ஆனால் இந்த பிறழ்வுகளில் ஒரு சிறிய பகுதி மட்டுமே வைரஸின் தொற்று அல்லது கடுமையான நோய்களை ஏற்படுத்தும் திறன்களை கணிசமாக மாற்றுகிறது.
WHO சமீபத்திய அறிவிப்பில், உலகளவில் தற்போது அதிகரிக்கும் பரவலை பார்க்கையில், மறுசீரமைப்பு உட்பட மேலும் பல மாறுபாடுகள் தொடர்ந்து தோன்றக்கூடும். கொரோனா வைரஸ்கள் மத்தியில் மறுசீரமைப்பு பொதுவானது மற்றும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
XE வகையால் பாதிப்பு உள்ளதா?
தற்போது வரை, XE வகை கொரோனா மற்ற ஒமிக்ரான் வகைகளிலிருந்து கணிசமாக வேறுபட்டது என்பதைக் காட்ட எந்த ஆதாரமும் இல்லை. BA.2 மாறுபாட்டை விட XE 10 சதவீதம் அதிகமாக பரவக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை, அதனை உறுதிப்படுத்தவில்லை.
மூன்று மாதங்களுக்கு முன்பு தென்பட்ட XE வகை கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை பெரியளவில் இல்லாததை பார்க்கையில், அதன் தாக்கம் எதிர்ப்பார்த்த அளவு இருக்காது என்பது தெரிகிறது.
XE வகை கொரோனாவின் மருத்துவ வெளிப்பாடு BA.1 அல்லது BA.2 இலிருந்து வேறுபட்டதாகக் கண்டறியப்படவில்லை. மற்ற ஓமிக்ரான் வகைகளுடன் ஒப்பிடுகையில், நோயின் கடுமையான வடிவத்தை ஏற்படுத்துவதாக இதுவரை கண்டறியப்படவில்லை.
தொற்று பரவல் மற்றும் குணாதிசயங்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள், தீவிரத்தன்மை கண்டறியப்படும் வரை, XE வகை கொரோனா ஒமிக்ரான் மாறுபாட்டிற்கு சொந்தமானது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கோவிட்-19 இன் XE மாறுபாடு இந்தியாவிற்கு வருமா?
இந்தியாவில் XE வகை கொரோனா காணப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. மும்பை பெண்ணிற்கோ அல்லது பிற்காலத்தில் வேறு சில நோயாளிகளுக்கோ தென்படலாம். ஏனெனில், பயணக் கட்டுப்பாடு முழுவதும் நீக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவையும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
XE அல்லது ஓமிக்ரானின் வேறு எந்த மறுசீரமைப்பு வகைகளும் இந்திய மக்களிடையே பரவுவதை தடுத்திட முடியாது. XE வகை கொரோனா ஏற்கனவே இந்திய மக்களிடம் பரவியிருக்கலாம். ஆனால் இன்னும் கண்டறியப்படவில்லை.
தற்போதைக்கு, இது Omicron மாறுபாட்டிலிருந்து மிகவும் வேறுபட்டதல்ல. நோய்த்தொற்று, நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்ப்பது அல்லது மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துவது போன்ற சிறப்புத் திறன்களை வளர்த்துக் கொள்ளாத வரையில், XE வகை கொரோனாவால் இந்திய மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது மிகவும் குறைவாகும்.
இந்தியர்கள் சுதந்திரமாக காற்றை சுவாசிக்கலாமா?
இந்தியாவில் கொரோனா தொற்றின் அடுத்த அலை ஏற்படாமல் தடுத்திட முடியாது. ஏனெனில், வைரஸ் முழுமையாக அழிக்கப்படவில்லை. அது, தொடர்ந்து பிறழ்வுகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
ஆனால் ஒரு புதிய மாறுபாடு தோன்றாத நிலையில், அது மிகவும் பரவக்கூடியது, நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்க்கும் சிறப்புத் திறன் கொண்டது அல்லது மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துவது போன்ற நிலைமை தற்போதைக்கு உருவாக வாய்ப்பில்லை.
ஏனெனில், இந்திய மக்கள்தொகையில் மிகப் பெரிய விகிதத்தில், அதாவது 40 முதல் 50 சதவீதம் பேர், சமீபத்திய ஒமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நோய்த்தொற்றிலிருந்து பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியின் பலன், உடலில் இன்னும் இருக்கும். எனவே, அதே மாறுபாட்டிலிருந்து மீண்டும் தொற்று ஏற்படுமா என்பது தெரியவில்லை. ஆனால், அது மிகவும் பொதுவானதும் அல்ல.
எதிர்காலத்தில் ஒரு புதிய அலை வரும் பட்சத்தில், அவை Omicron மாறுபாட்டின் பண்புகள் இல்லாத ஒரு புதிய மாறுபாட்டால் பெரும்பாலும் ஏற்படும். தற்போது, கிடைத்திருக்கும் தகவலை பார்க்கையில், அடுத்த அலைக்கான மாறுபாடு நிச்சயம் XE வகை கொரோனாவாக இருக்காது என்பது தெரிகிறது.
source https://tamil.indianexpress.com/explained/xe-variant-omicron-covid-19-concerns-437074/