சனி, 16 அக்டோபர், 2021

21 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு முடிவு : வனத்துறையினரிடம் பிடிப்பட்ட டி23 ஆட்கொல்லி புலி

 

Tamilnadu News Update : நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஏராமான வன உயிரினங்கள் வசித்து வருகினறன. இந்த பகுதியில் அவ்வப்போது காட்டு யானைகள் பயிரை நாசம் செய்து வருவதாக பலரும் புகார் தெரிவித்து வருவது வழக்கமான ஒனறாக உள்ளது. ஆனால் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வரும் நிலையில், சமீபத்தில் புலி தாக்குதலுக்கு ஆளாகி 4 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும் புலி கொன்றுள்ளது.

இதனால் இந்த புலியை பிடிக்க வேண்டும் என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் அந்த புலியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் புலியை கொல்லக்கூடாது என்றும், மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்க வேண்டும் என்று  ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்ததை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் ப புலியை உயிருடன் பிடிக்க கடும் முயற்சியில் ஈடுபட்டனர்.  டி-23 புலி என பெயரிடப்பட்ட அந்த புலியை பிடிக்கும் பணியில் மோப்பநாய்களும், கும்கி யானைகளும் ஈடுபடுத்தப்பட்டது.

மேலும் புலியின் நடமாட்டத்தை கண்கானிக்கும் வகையில், வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், மசினகுடி வனப்பகுதியில் புலியின் நடமாட்டத்தை இருப்பதை கண்ட வனத்துறையினர் அதனை பிடிக்கும் முயற்சியாக மயக்கு ஊசி செலுத்தினர். ஆனால் புலி அங்கிருந்து தப்பியோடிவிட்டது. ஆனாலும் மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் புலி சோர்ந்துவிடும் என்பதால் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் வேட்டையில், மசினகுடி பகுதியில் இருந்த புலிக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். 21 நாட்களாக புலியை பிடிக்க நடைபெற்ற தேடுதல் வேட்டை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-forest-officers-catch-d23-tiger-in-nilgiris-356028/