வியாழன், 3 அக்டோபர், 2024

மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்; மது ஒழிப்பு மாநாட்டில் வி.சி.க நிறைவேற்றிய 13 தீர்மானங்கள்

 

Thirumavalavan confe

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமை (அக்டோபர் 2) நடைபெற்றது. இந்த மாநாட்டில் மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடைசி தீர்மானமாக காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பது போல, ஐயா வைகுண்டர் பிறந்தநாளில் மது பானக் கடைகளை மூட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வி.சி.க தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில், மதுவிலக்கை தேசியக் கொள்கையாக்க வேண்டும், மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வி.சி.க-வின் இந்த மாநாட்டில், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தேசிய துணைத் தலைவர் உ. வாசுகி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் மகளிர் பிரிவு தலைவர் ஃபாத்திமா முஸப்பர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

மது மற்றும் போதைப் பொருள்களை ஒழிக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், வி.சி.க தலைவர் திருமாவளவனால் 13 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

மது மற்றும் போதைப் பொருள்கள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 13 தீர்மானங்கள்:

1.அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 47-ல் கூறியுள்ளவாறு மதுவிலக்கைத் தேசியக் கொள்கையாக வரையறுக்கவும் சட்டமியற்றவும் வேண்டும்.

2.மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்கிட வேண்டும்.

3.மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும்.

4.மதுவிலக்கு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும்.

5.தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக, மதுபானக் கடைகளை மூடுவதற்குரிய கால அட்டவணையை அரசு அறிவித்திட வேண்டும்.

6.தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்திஅக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

7.மது  மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பரப்பியக்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்த வேண்டும். 

8.குடி நோயாளிகளுக்கும், போதைக்கு  அடிமை நோயாளிகளுக்கும் நச்சு நீக்க சிகிச்சை (டி-அடிக்ஷன்) அளிக்க அரசு மருத்துவமனைகளில் அவற்றுக்கான மையங்களை (மறுவாழ்வு) உருவாக்க வேண்டும். 

9.மது  மற்றும் போதை அடிமை நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திட வேண்டும்.

10.டாஸ்மாக் என்னும் அரசு நிறுவனத்தின் மது வணிகத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கிட வேண்டும்.

11. மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டுமென்ரு தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

12.மதுவிலக்குப் பரப்பியக்கத்தில் அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும்.

13.ஐயா வைகுண்டர் பிறந்தநாளில் மது பானக் கடைகளை மூட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

02/10/24


source https://tamil.indianexpress.com/tamilnadu/vck-anti-liquor-conference-thirumavalavan-13-resolution-7238619