திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரு தர்பங்கா பயணிகள் விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த மைசூரு தர்பங்கா பயணிகள் விரைவு ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் விபத்து நேரிட்டுள்ளது. குறிப்பாக இரவு 9.20 மணி அளவில் இரு ரயில்களும் மோதியதில் பெட்டிகள் தரம்புரண்டதாகவும், அதனால், தீப்பற்றி எரிவதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்தில், பயணிகள் ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. பயணிகள் பெட்டியில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதி இருட்டாக இருப்பதால், எத்தனை பயணிகள் விபத்தில் சிக்கி இருக்கிறார்கள் என்பது குறித்த விபரம் இன்னும் தெரியவில்லை. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரக்கோணத்தில் இருந்து என்டிஆர்எப் வீரர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ராட்ச கிரேன் மூலம் விபத்துக்குள்ளான பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை சென்ரலில் இருந்து வடமாநிலங்களை நோக்கி புறப்பட இருந்த ரயில்கள் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கும்மிடிபூண்டியில் இருந்து இயக்கப்படும் புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தடம் புறண்ட ரயில்பெட்டிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி இந்த மார்க்கத்தில் ரயில் சேவை சீராக நாளை மாலைவரை ஆகலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
source https://news7tamil.live/thiruvallur-cargo-train-and-passenger-train-collide-accident.html