திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த நிலையில் பத்திரமாக தரையிரக்கப்பட்டது. இந்நிலையில் அந்த திக் திக் நிமிடங்கள் குறித்து பார்க்கலாம்.
இன்று (11.10.2024) மாலை 5.40 மணி முதல் இரவு 8.15 மணிவரை நடந்தது…
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (அக்.11) மாலை 5.40 மணிக்கு ஷார்ஜாவுக்கு 144 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது.
தொடர்ந்து, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதாவது 5.42 மணிக்கு ஹைட்ராலிக் பிரச்னை காரணமாக விமானத்தின் சக்கரங்களை உள் இழுக்க முடியாதது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, விமானிகள்5.43 மணிக்கு விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நிலையில், விமானத்தை தரையிறக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
விமானத்தை திருச்சி சர்வதேச விமான நிலையத்திலேயே தரையிரக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், 5.45 மணிக்கு விமானத்தின் எரிபொருளை குறைக்கப்பதற்காக வானில் வட்டமடிக்க விமானிகள் முடிவுசெய்தனர்.
உடனடியாக 5.46 மணிக்கு விமானிகள் இதுகுறித்து பயணிகளுக்கு தகவல் அளித்தனர். இதனைக் கேட்டதும் விமானத்தில் பயணித்த 144 பயணிகள் அச்சமடைந்தனர்.
அதேநேரத்தில், 5.50 மணிக்கு விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் மீண்டும் கூடியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் 5.55 மணிக்கு தகவறிந்து ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தன.
மேலும், 6.10 மணிக்கு விமானத்தை தரையிறக்குவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் துரிதப்படுத்தினர்.
அதே சமயத்தில், (6.40 மணி) அந்த விமானம் சுமார் 1 மணி நேரமாக வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.
விமானம் வானிலேயே வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில் திருச்சியின் சுற்றுவட்டார பகுதிகளான விராலிமலை, குண்டூர் உள்ளிட்ட கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. 7 மணியளவில் திருச்சி சுற்றுவட்டார பகுதி மக்கள் விமானத்தை பொது இடங்களில் கூடி பரபரப்புடன் பார்வையிட்டனர்.
சுமார் 2.15 மணிநேரமாக விமானம் வானில் வட்டமடித்துக்கொண்டிருந்ததை அடுத்து 8.00 மணிக்கு விமானத்தின் எரிபொருள் குறைந்த நிலையில், விமானத்தை தரையிறக்க விமானிகள் முடிவு செய்தனர்.
சுமார் 2.35 மணிநேரத்திற்கு பிறகு விமானியில் தீவிர முயற்சியினால் 8.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதன்பிறகு விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் நிம்மதியடைந்தனர்.
source https://news7tamil.live/tick-tick-minutes-in-trichy-what-happened.html