தன்பாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் (ஐ.ஐ.டி) பட்டியல் இன மாணவர் ஒருவருக்கு படிக்க இடம் கிடைத்த நிலையில், வறுமை காரணமாக அவரால் 4 நாட்களுக்குள் 17,500 ரூபாய் கட்டணத்தை செலுத்த இயலவில்லை. இந்நிலையில், சீட் மறுக்கப்பட்ட மாணவரின் சேர்க்கைக்கு அனுமதி வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியல் இன பிரிவைச் சேர்ந்தவர் அதுல் குமார். இவருக்கு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்புக்கான இடம் கிடைத்துள்ளது. வறுமை காரணமாக அவரால் 4 நாட்களுக்குள் 17,500 ரூபாய் கட்டணத்தை செலுத்த இயலாத நிலையில், அவருக்கு சேர்க்கை மறுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஐ.ஐ.டி மெட்ராஸ் ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு ஆணையமாக இருந்ததால், நிவாரணம் கோரி அவர் முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தனது மனுவில் அவர், தனது தந்தை ஒரு தினக்கூலித் தொழிலாளி என்றும், ஐ.ஐ.டி தன்பாத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்புக்கான கட்டணத் தொகையாக ரூ.17,500 ஏற்பாடு செய்த நேரத்தில், போர்ட்டலின் சர்வர் பதிலளிப்பதை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது ஐ.ஐ.டி மெட்ராஸ் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல என்று கூறியுள்ளது. இதனையடுத்து, அதுல் குமார் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். இந்த வழக்கை கடந்த 25-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், ஐஐடி மெட்ராஸில் உள்ள ஐ.ஐ.டி சேர்க்கை ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐ.ஐ.டி ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அவரது லாக்-இன் விவரங்கள் அவர் பிற்பகல் 3 மணிக்கு உள்நுழைந்ததாகக் குறிப்பிடுவதாகக் கூறினார், அதாவது அவர் கடைசி நிமிடத்தில் உள்நுழையவில்லை என்றார்.
மேலும், பிற்பகல் 3.12 மணி முதல் அவர் தனது முடிவைப் பார்த்துக் கொண்டிருந்தார். பணம் செலுத்த எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தார் என்றும், முந்தைய மோக் நேர்காணலின் தேதியிலேயே அவருக்குத் தேவையான கட்டணம் குறித்து தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். அப்போது, நீதிபதி பார்திவாலா வழக்கறிஞரிடம், “ஏன் இவ்வளவு எதிர்க்கிறீர்கள்? நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா என்று பார்த்திருக்க வேண்டும்." என்றும் கூறினர்.
இதனிடையே வாதிட்ட அதுல் குமாரின் வழக்கறிஞர், 'இரண்டு முயற்சிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், சேர்க்கையைப் பெறுவதற்கான கடைசி வாய்ப்பு இது' என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். அப்போது நீதிபதி பர்திவாலா, 'இருக்கை ஒதுக்கீட்டுத் தகவல் சீட்டு பதிவில் உள்ளதா? என்று ஐ.ஐ.டி ஆணைய வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
"17,500 ரூபாய் செலுத்துமாறு இருக்கை ஒதுக்கீட்டுச் சீட்டில் அறிவுறுத்தப்பட்டதாக நீங்கள் கூறியுள்ளதால் அவர் அவ்வாறு கேட்கிறார். எனவே எல்லாம் ஒழுங்காக இருந்தது. அவர் 17,500 ரூபாயை திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே டெபாசிட் செய்திருந்தால், நீங்கள் அவரை அனுமதித்திருப்பீர்களா இல்லையா? ”என்றும் நீதிபதி பர்திவாலா கேள்வி எழுப்பினார்.
அந்த சீட்டு பதிவில் இல்லை என்று கூறிய ஐ.ஐ.டி ஆணைய வழக்கறிஞர், “அவர் (அதுல் குமார்) ஒரு பட்டனை அழுத்தியிருந்தாலும், அவருக்கு இன்னும் ஒரு நாள் கொடுத்திருப்போம” என்று கூறினார். அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “அவர் மிகவும் பிரகாசமான மாணவர். அவருடைய பதிவுத் தாள்களைப் பாருங்கள். அவர் பட்டனை அழுத்தாமல் இருக்க வழி இல்லை. ரூ. 17,500 பாப் அப் செய்ய முடியாமல் போனதுதான் அவரைத் தடுத்து நிறுத்தியது. மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ற முறையில், 17,500 ரூபாய் இல்லாததால் எந்த குழந்தையும் சேர்க்கையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்." என்று கருத்து கூறினார்.
இதனையடுத்து, “திறமையான மாணவனை ஏமாற்றி விடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஐ.ஐ.டி தன்பாத்தில் அவருக்கு அனுமதி வழங்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்." என்று உத்தரவிட்ட நீதிபதிகள், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த அதுல் குமார் என்ற மாணவர், அதே பாடப் பிரிவில் சேர்க்கப்பட வேண்டும். அவருக்கு சூப்பர்நியூமரரி இருக்கை உருவாக்க வேண்டும். அது தற்போதுள்ள மாணவர்கள் யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. விடுதி ஒதுக்கீடு உட்பட அனைத்து விளைவான சலுகைகளுக்கும் அவருக்கு உரிமை உண்டு என்றும் தெரிவித்தனர்.
தொடர்ந்து, “ஆல் தி பெஸ்ட். நன்றாக படியுங்கள்" என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வாழ்த்தினார். அப்போது, மூத்த வழக்கறிஞர்கள் அவரது கட்டணத்தை செலுத்த முடிவு செய்துள்ளதாக அவரது வழக்கறிஞர் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/india/supreme-court-orders-iit-dhanbad-to-admit-student-who-lost-seat-after-failing-to-pay-fee-on-time-tamil-news-7214879