வியாழன், 17 அக்டோபர், 2024

மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்! வெற்றி காண்போம்!” – உமர் அப்துல்லாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 

தென்முனையில் உள்ள தமிழ்நாடும் வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம் எனக் கூறி உமர் அப்துல்லாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றது. அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1 என மொத்தம் 49 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. இதனை அடுத்து தேசிய மாநாடு கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவருக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ஆதரவு கொடுத்தனர். இதனால் அக்கட்சியின் பலம் 46 ஆக அதிகரித்தது.

இதையடுத்து, கடந்த 11-ஆம் தேதி துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவை உமர் அப்துல்லா சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் புதிய முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்க துணை நிலை கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் புதிய முதலமைச்சராக உமர் அப்துல்லா இன்று (16.10.2024) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து 5 அமைச்சர்கள் பதிவியேற்றுக் கொண்டனர். இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் டி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், திமுக சார்பில் அக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, என்சிபி சார்பில் சுப்ரியா சுலே, ஆம் ஆத்மி சார்பில் சஞ்சய் சிங், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள உமர் அப்துல்லாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாகக் கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனிமொழியை என் சார்பாகவும் திமுக சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன்.

இந்தியத் துணைக் கண்டத்தில் தென் முனையில் உள்ள தமிழ்நாடும் வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்! வெற்றி காண்போம்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



source https://news7tamil.live/chief-minister-m-k-stals-congratulations-to-umar-abdullah-who-has-taken-over-as-the-chief-minister-of-jammu-and-kashmir.html