17 10 24
புதிய நடைமுறையால் அவதிக்குள்ளாகும் #RationCard விண்ணப்பதாரர்கள்!
குடும்ப அட்டையில் பெயர் நீக்கல், சேர்த்தலுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டாலும், களச் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் ஆகியவற்றுக்கு அதற்கான சான்றிதழ்கள் சமர்ப்பிப்பது அவசியமாக உள்ளது. இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் சான்றிதழ்களின் அடிப்படையில், குடும்ப அட்டைக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் விண்ணப்பத்தின் அடிப்படையில் அண்மையில், உயிருடன் உள்ளவர்களின் பெயர்கள், பல குடும்ப அட்டையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததையடுத்து, தற்போது குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கத்துக்கு அதிகாரிகள் களச் சரிபார்ப்பு முறை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி குடும்ப அட்டையில் பெயரை நீக்க, தொடர்புடைய அதிகாரிகள் விண்ணப்பதாரரின் வீட்டுக்கே சென்று சரி பார்த்து, பெயர் நீக்கத்துக்கான ஒப்புதலை வழங்குகிறார்கள். இதில் முரண்பட்ட, தவறான தகவல்கள் இருக்கும் நிலையில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
இந்நிலையில் ஓராண்டுக்குப் பிறகு, புதிய குடும்ப அட்டை வழங்கும் பணியை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. 2023 முதல் இதுவரை 2.9 லட்சம் பேர் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், அவற்றில் 1.3 லட்சம் பேருக்கு மட்டுமே புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப அட்டை வழங்குவதில், களச் சரிபார்ப்பு முறையால் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், பல விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்காமல் காலதாமதம் செய்வதாகவும் விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
“புதிதாக திருமணமானவர்கள் குடும்ப அட்டை பெற, திருமணப் புகைப்படங்கள் இருந்தாலே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், தற்போது திருமணச் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுபோல் திருமண பதிவுச் சான்றிதழைச் சமர்ப்பிக்காத நிலையில், குடும்ப அட்டையில் இருந்து பெயர்கள் நீக்கவும் முடியாது.
விவாகரத்து, தத்தெடுத்தல் தவிர, இதர விவகாரங்களுக்கு திருமண பதிவுச் சான்றிதழ்கள் மட்டுமே தற்போது ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஏனெனில் ஒரு சில பெற்றோர், தனிப்பட்ட பிரச்னைகளால் தங்கள் பிள்ளைகளின் பெயர்களை குடும்ப அட்டையிலிருந்து நீக்கி விடுகின்றனர். இதனாலேயே இம்முறை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது” என்றனர்.