சனி, 21 டிசம்பர், 2024

நாடாளுமன்ற நுழைவாயிலில் என்ன நடந்தது என்பது உலகத்திற்குத் தெரிய வேண்டாமா?” – ப.சிதம்பரம் கேள்வி!

 

நாடாளுமன்ற நுழைவு வாயிலில் என்ன நடந்தது என்பது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? அங்குள்ள கேமராக்களின் பதிவை வெளியிட அரசு ஏன் மறுக்கிறது? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்பேத்கர் குறித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரு நாள்களாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் (டிச. 19) அன்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியாகச் சென்றனர். அப்போது, காங்கிரஸ்தான் அம்பேத்கரை அவமதித்து வருவதாக ஆளும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

இதில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பாஜக எம்.பி.க்கள் இருவர் காயமடைந்தனர். ராகுல் காந்தி தள்ளிய வேறொரு எம்.பி. தன் மீது விழுந்ததால், தான் விழுந்ததாக காயமடைந்த பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி கூறினார். பாஜக எம்.பி.க்கள்தான் தங்களை நாடாளுமன்றத்திற்குள் நுழையவிடாமல் தடுத்ததாக காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ராகுல் காந்தி மீது இதுதொடர்பாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “நாடாளுமன்ற நுழைவாயிலில் பொருத்தப்பட்டுள்ள காமிராக்களின் ஒளி, ஒலி பதிவுகளை வெளியிட வேண்டும் என்பது கோரிக்கை. இந்த எளிய கோரிக்கையைப் புரிந்துகொள்ள முடியாதா? இதற்கு ‘வெளியிட வேண்டும்’ அல்லது ‘வெளியிட வேண்டாம்’ என்ற இரண்டில் ஒன்றுதானே பதிலாக இருக்க முடியும்?

நேரடியாகப் பதில் சொல்வதை ஏன் அரசு தவிர்க்கிறது? இந்தக் கோரிக்கைக்குப் பதில் சொல்லாமல் வாதப்பிரதிவாதம், வியாக்கியானம், தத்துவம் எல்லாம் எதற்கு? நாடாளுமன்ற நுழைவாயிலில் என்ன நடந்தது என்பது உலகத்திற்குத் தெரிய வேண்டாமா? நுழைவாயிலிலும் நாடாளுமன்ற வளாகத்திலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் காமிராக்களில் உள்ள ஒளி, ஒலி பதிவுகளை வெளியிட வேண்டியது தானே? அந்தப் பதிவுகளை வெளியிடுவதற்கு அரசு ஏன் மறுக்கிறது? உண்மை என்ன, பொய் என்ன என்பதைப் பதிவுகளை வெளியிட்டால் தெளிவாகத் தெரிந்துவிடுமே?” என்று பதிவிட்டுள்ளார்.


source https://news7tamil.live/shouldnt-the-world-know-what-happened-at-the-entrance-to-parliament-p-chidambaram-asks.html

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் – காவல்துறை அறிவுறுத்தல்!

 

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஓட்டல்கள், விடுதிகள், கடற்கரை வீடுகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்துக் காவல் துறையினர் அவற்றின், உரிமையாளர்களை அழைத்து திருமண மண்டபத்தில் பேசியுள்ளனர். மாமல்லபுரம் துணை கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரவி அபிராம் தலைமையில், அப்பகுதி காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் முன்னிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் சாக்கில் சுற்றுலா வரும் பெண்களைக் கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்களில் டிசம்பர் 31-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எந்த ஓட்டல்களிலும் இரவு 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது, குறிப்பாகக் கடற்கரை ரிசார்ட்களில் தங்கி உள்ளவர்கள் இரவு 12 மணிக்கு மேல் அறைகளை விட்டு வெளியே வரக் கூடாது, பின்புறம் உள்ள கடற்கரை பகுதிக்குச் செல்ல அனுமதிக்கக்கூடாது, அங்குள்ள கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் வரவேற்பு அறையில் உள்ள சிசிடிவி கேமரா கண்டிப்பாக இயங்க வேண்டும். அறை எடுத்து கேளிக்கை கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு வரும் விருந்தினர்களிடம் ஆதார அட்டை, தேர்தல் வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை பெற்றுக்கொண்டே ஓட்டல் நிர்வாகங்கள் அறைகள் ஒதுக்கித் தரவேண்டும். தங்குபவர்களின் செல்போன் நம்பரைக் கண்டிப்பாக அவர்களிடம் வாங்கி நட்சத்திர விடுதி பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் போன்ற பல விதிமுறைகளை வலியுறுத்தினர்.

அப்போது புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றிய சில சந்தேகங்களையும் ஓட்டல் மேலாளர்கள் காவல்துறையிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

source https://news7tamil.live/entertainment-programs-should-not-be-held-on-east-coast-road-police-department-notice.html

அரசியல் சட்டத்திற்கு விழா எடுத்து, மற்றொரு புறம் அதனை உருவாக்கியவரை அவமரியாதை

 CM Stalin Statement

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தி.மு.க எம்.பி.க்களின் உரை குறித்தும், பா.ஜ.க-வின் நிலைப்பாடு குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவுற்றுள்ளது. இக்கூட்டத் தொடரில் வீறுகொண்ட வீரர்களாக தி.மு.க நாடளுமன்ற உறுப்பினர்கள் முழங்கி இருக்கிறார்கள்.

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளைப் பார்த்து நாடே வியந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நலனுக்காக குரல் கொடுப்பது - மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பி அவையின் கவனத்தை ஈர்ப்பது ஆகிய இரண்டையும் வெற்றிகரமாகச் செய்து காட்டி இருக்கிறார்கள். மற்ற மாநில எம்.பி.க்களுக்கு முன்னோடிகளாக கழக எம்.பி.க்கள் செயல்படுவதைப் பார்த்து - நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் தலைவராக நான் எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.

தி.மு.க எம்.பி.க்கள் என்ன பேசுகிறார்கள் - நாட்டை உலுக்கும் முக்கியப் பிரச்சினைகளில் தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன என்பதை இன்று நாடே உன்னிப்பாக கவனிக்கும் நிலைக்கு இந்த திராவிடப் பேரியக்கம் வளர்ந்திருப்பதை நினைத்தும் பெருமையாக இருக்கிறது.

அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் என தான் பொறுப்பேற்று பதில் சொல்லியே ஆகவேண்டிய அனைத்திலும் கனத்த மவுனம் காக்கும் பிரதமர் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வினரால் ஜனநாயகம் படாத பாடு பட்டபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவையை நடத்த விரும்புவதை விட- அவையை முடக்க வேண்டும், அரசின் தோல்விகள் குறித்த எந்த விவாதமும் நடைபெற்று விடக்கூடாது என்பதையே மனதில் வைத்து பா.ஜ.க எம்.பி.க்கள் செயல்பட்டதை நாம் காண முடிந்தது. ஆக்கப்பூர்வமான விவாதம் செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பது நாடாளுமன்றத்தைப் பொறுத்தமட்டில் அரிதான நிகழ்வாக பா.ஜ.க ஆட்சியில் மாறி விட்டதை எண்ணி ஒரு மிகப்பெரிய ஜனநாயக இயக்கமாம் தி.மு.க கவலை கொள்கிறது.

குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மக்களவையானது 54.5 விழுக்காடும், மாநிலங்களவை 40 விழுக்காடும்தான் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைவிட வேதனையான செய்தி இருக்க முடியுமா?

நமது நாட்டின் பெருமைமிக்க அரசியல் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் போது – பா.ஜ.க ஆட்சியின் கையில் “நாடாளுமன்ற ஜனநாயகம்” எப்படி பிய்த்து எறியப்பட்டுள்ளது என்பதற்கு இந்த குளிரகாலக் கூட்டத்தொடரே சாட்சி. அரசியல் சட்டத்தின் 75 ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது – அச்சட்டத்தை உருவாக்கித் தந்த அம்பேத்கரை ஒன்றிய உள்துறை அமைச்சரே அவதூறு செய்து - இழிவுபடுத்திப் பேசுவது பா.ஜ.க-வின் உயர்வர்க்க பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது. ஒருபுறம் அரசியல் சட்டத்திற்கு விழா - இன்னொரு புறம் அதை உருவாக்கித்தந்த அண்ணலுக்கு அவதூறு! இதுதான் பா.ஜ.கவின் பசப்பு அரசியல் ஆகும்.

இவ்வளவு களேபரத்திலும் – தி.மு.க மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்ற தவறவில்லை என்பது - இவர்கள் கலைஞர் வளர்த்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்ட திராவிட இயக்க ஆற்றலாளர்கள் என்பதை அரங்கேற்றியுள்ளது.

“ஒரே நாடு ஒரே தேர்தலை” கடுமையாக எதிர்த்துப் பேசிய தி.மு.க மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு - “மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை ரத்து செய்யுங்கள்” என்றும் “பேரிடர் மேலாண்மை 2024 திருத்தச் சட்டத்தை எதிர்த்தும்” அனல் பறக்கப் பேசிய தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் தங்கை கனிமொழி - “அவைக்குப் பிரதமரே வருவதில்லை” என்று முழங்கிய திருச்சி சிவா - அரசியல் சட்டத்தின் 75 ஆவது ஆண்டில், “அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறு கட்டமைப்புக் கூறுகளும் - கேசவானந்த பாரதி வழக்கும்” என அரசியல் சட்ட நுணுக்கம் நிறைந்த ஆ. இராசா - மாநில உரிமைகளைப் பற்றியும், மதவாத அரசியல் அச்சுறுத்தல் குறித்தும் உரையாற்றிய ஜெகத்ரட்சகன் - “வானிலை அறிவிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துக” என தயாநிதி மாறன் - என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஒன்றிய அரசைத் தட்டி எழுப்பினார்கள்.

தமிழ்நாடு நலன் சார்ந்த - நம் நாட்டு நலன் சார்ந்த பேச்சுக்களை நான் மட்டுமல்ல நாடே கைதட்டி இப்படியல்லவா நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் எனப் பாராட்டி வருகிறது.

குளிர்காலக் கூட்டத்தொடரில் மட்டும் நம் எம்.பி.க்கள் ஆக்கப்பூர்வமாக எழுப்பிய அடுக்கடுக்கான திட்டங்கள் பற்றி இங்கே சுட்டிகாட்ட விரும்புகிறேன்.

 இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை.

 ரயில்வே திட்டங்கள்.

 மெட்ரோ ரயில் திட்ட நிதி ஒதுக்கீடு.

 சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ்தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது.

 விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரிக்கை.

 விவசாயிகளுக்கான பி-எம். கிசான் திட்டத்தின்கீழ் போதிய நிதி ஒதுக்காதது.

 தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்துதல்.

 சுங்கச்சாவடிகளை ஒழித்தல்

 நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை.

 நீதித்துறையில் பன்முகத்தன்மை கோரிக்கை.

 சிறுபான்மையினர் பொருளாதாரத் திட்டங்கள் பற்றிய கோரிக்கை.

 சிறுபான்மையினரைத் தாக்கிப் பேசிய உயர்நீதிமன்ற நீதிபதிக்கு நாடாளுமன்றக் கண்டனத் தீர்மானம்.

 நீட் தேர்வு முறைகேடுகள்

 வக்ப் வாரிய சட்டத் திருத்த எதிர்ப்பு

 தமிழ்நாட்டின் விமான நிலையத் திட்டங்கள்.

 இந்திய - சீன எல்லைப் பிரச்சினை பற்றி வெள்ளை அறிக்கை கோரியது.

 சென்னை-தூத்துக்குடி வந்தே பாரத்.

 பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்காதது.

 உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை.

 மதுரை எய்ம்ஸ்

 நூறு நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி - தினக் கூலியையும் உயர்த்துவது.

 அகழ்வாராய்ச்சிக்குத் தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை.

இப்படி எண்ணற்ற திட்டங்களை - தமிழ்நாட்டின் உரிமைகளை - எந்த மாநில எம்.பி.க்களைக் காட்டிலும் – தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய கழக எம்.பி.க்கள் எழுப்பியது எழுச்சியூட்டியது.

அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக - தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்து வரும் தி.மு.க-வின் தலைவர் என்ற நிலையில் நம் எம்.பி.க்களின் சாதனைகளை மார்தட்டி அறிவித்துக்கொள்ள வேண்டியது முக்கியம் என்றே கருதுகிறேன்.

ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் குரலாகக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகள் - எழுப்பிய மாநில உரிமை முழக்கங்கள் – ஜனநாயகத்தைப் பாழ்படுத்தும் “ஒரே நாடு ஒரே தேர்தலை” ஆணித்தரமாக எதிர்த்த நாடாளுமன்றக் குரல்கள் எல்லாம் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான ஒன்றிய அரசின் செவிகளில் உரக்கவே விழுந்திருக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதன் மூலம் ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை – தமிழ்நாட்டு மக்களை ஓரவஞ்சனையுடன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்த முடியாது என்ற செய்தியை அழுத்தம் திருத்தமாகக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்கள் நமது எம்.பி.க்கள்!

இனியும் ஒன்றிய அரசு திருந்தவில்லை என்றால் - தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லையென்றால் - தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி!" என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 



source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-stalin-slams-bjp-8545733

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவது ஏன்?

 21/12/2024

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 85ஐ தாண்டியுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், $1 வாங்குவதற்கு ஒருவர் ரூ.85 செலுத்த வேண்டும். ஏப்ரலில், இந்த "செலாவணி விகிதம்" சுமார் 83 ஆக இருந்தது, ஒரு தசாப்தத்திற்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற போது, டாலர் மதிப்பு 61 ஆக இருந்தது. எனவே, டாலருக்கு நிகரான மதிப்பில் ரூபாயின் மதிப்பு வலுவிழந்து வருகிறது. நிச்சயமாக, இது அட்டவணை 1 காட்டும் நீண்ட காலப் போக்கு மூலம் தெரிகிறது.

மாற்று விகிதம் என்ன?

பொதுவாக, நாம் நமது இந்திய ரூபாயைப் பயன்படுத்தி பொருட்களையும் (பீட்சா அல்லது கார் போன்றவை) சேவைகளையும் (ஹேர்கட் அல்லது ஹோட்டலில் தங்குவது போன்றவை) வாங்குகிறோம். ஆனால் இந்தியாவிற்கு வெளியில் இருந்து நமக்குத் தேவைப்படும் பல விஷயங்கள் உள்ளன - அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார் அல்லது சுவிஸ் சுற்றுலா அல்லது உண்மையில், கச்சா எண்ணெய் போன்ற பல உள்ளன. அத்தகைய பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்திற்கும் நாம் இறுதிப் பொருளை வாங்குவதற்கு முன், முதலில் நமது உள்நாட்டு நாணயத்தைப் பயன்படுத்தி அமெரிக்க (டாலர்) அல்லது சுவிஸ் கரன்சியை (யூரோ) வாங்க வேண்டும். நாணயங்களுக்கு இடையில் ஒருவர் மாற்றக்கூடிய வீதம் மாற்று வீதமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு டாலர் அல்லது யூரோவை எத்தனை ரூபாய் வாங்கும் என்பதாகும்.

அத்தகைய சந்தையில் - நாணய சந்தை என்றும் குறிப்பிடப்படுகிறது - ஒவ்வொரு நாணயமும் ஒரு பண்டம் போன்றது. மற்றொரு நாணயத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு நாணயத்தின் மதிப்பும் பரிமாற்ற வீதம் எனப்படும். இந்த மதிப்புகள் காலப்போக்கில் ஒரே மாதிரியாக இருக்கும், ஆனால் அடிக்கடி மாறாமல் இருக்கும்.

மாற்று விகிதத்தை எது தீர்மானிக்கிறது?

வாழ்க்கையில் மற்ற எந்த வர்த்தகத்தைப் போலவே, ஒரு நாணயத்தின் ஒப்பீட்டு மதிப்பு மற்றொன்றுக்கு எதிராக அதிகமாகக் கோரப்படுவதைப் பொறுத்தது. அமெரிக்கர்கள் இந்திய ரூபாயைக் கோருவதை விட இந்தியர்கள் அதிக அமெரிக்க டாலரைக் கோரினால், மாற்று விகிதம் அமெரிக்க டாலருக்குச் சாதகமாகச் சாய்ந்துவிடும்; அதாவது, அமெரிக்க டாலர் ஒப்பீட்டளவில் அதிக விலைமதிப்பற்றதாகவும், அதிக மதிப்புமிக்கதாகவும், அதிக விலை கொண்டதாகவும் மாறும். இந்த நிலை ஒவ்வொரு நாளும் மீண்டும் தொடர்ந்தால், இத்தகைய போக்கு வலுவடையும் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பை ரூபாய் இழக்கும். இந்த இயக்கம் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று வீதம் பலவீனமடையும் வடிவத்தில் காண்பிக்கப்படும்.

ஆனால் டாலருக்கு நிகரான ரூபாயின் தேவையை என்ன காரணிகள் தீர்மானிக்கின்றன?

நாணயங்களின் தேவையை பாதிக்கும் பல காரணிகள் உள்ளன.

தேவையின் ஒரு பெரிய கூறு சரக்கு வர்த்தகத்தில் இருந்து வருகிறது. எளிமையாக, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே இருக்கும் உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை விட அதிகமான பொருட்களை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தால், அமெரிக்க டாலருக்கான தேவை இந்திய ரூபாயின் தேவையை விட அதிகமாக இருக்கும். இதையொட்டி, அமெரிக்க டாலரின் மதிப்பு ரூபாய்க்கு எதிராக வலுப்பெறச் செய்யும், மேலும் ரூபாய் மதிப்புக்கு எதிராக அதன் மாற்று மதிப்பு உயரும். வேறு விதமாகச் சொன்னால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு பலவீனமடையும். இதனால் ஒரு அமெரிக்க டாலரை வாங்க அதிக ரூபாய் தேவைப்படும்.

மற்றொரு பெரிய கூறு சேவைகளில் வர்த்தகம். அமெரிக்கர்கள் இந்திய சேவைகளை வாங்குவதை விட இந்தியர்கள் அதிக அமெரிக்க சேவைகளை வாங்கினால் – இங்கு சுற்றுலாவை குறிப்பிடலாம் - மீண்டும், டாலருக்கான தேவை ரூபாயின் தேவையை விட அதிகமாகும், மேலும் ரூபாய் பலவீனமடையும்.

மூன்றாவது கூறு முதலீடுகள். இந்தியர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்வதை விட அமெரிக்கர்கள் இந்தியாவில் முதலீடு செய்தால், ரூபாயின் தேவை டாலரை விட அதிகமாகும் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயரும்.

இந்த மூன்று முக்கிய வழிகளில் மாற்று விகிதம் மாறலாம்.

ஆனால் இந்த மூன்று வகையான தேவைகளை என்ன காரணிகள் பாதிக்கின்றன?

நிச்சயமாக, இந்த மூன்று தேவைகளையும் பாதிக்கும் பல காரணிகள் உள்ளன.

இந்திய இறக்குமதியை அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்கா முடிவெடுத்ததாக வைத்துக் கொள்வோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய ரூபாயின் தேவை வெகுவாகக் குறையும். எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்கர்களால் இந்தியப் பொருட்களை வாங்க முடியாவிட்டால், அவர்கள் ஏன் இந்திய ரூபாயை வாங்க நாணயச் சந்தைக்குச் செல்வார்கள்?

இறுதி முடிவு: ரூபாய் மதிப்பு குறையும். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் உறுதியளித்தபடி, இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்து, அமெரிக்காவில் யாரும் அவற்றை வாங்காத அளவுக்கு விலை உயர்ந்தால், இதேபோன்ற ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், இந்தியாவும் அமெரிக்காவும் அதிக பணவீக்கத்தை அனுபவிக்கும் ஒரு சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள். வரையறையின்படி, பணவீக்கம் ஒரு நாணயத்தின் மதிப்பை விழுங்குகிறது, ஏனெனில் 5% பணவீக்கம் என்பது முதல் ஆண்டில் 100 ரூபாய்க்கு வாங்கக்கூடிய எதையும், இரண்டாவது ஆண்டில் வாங்குவதற்கு 105 ரூபாய் தேவைப்படுகிறது.

ஐந்தாண்டுகளில், அமெரிக்கா தனது பணவீக்கத்தை பூஜ்ஜியமாகக் குறைத்து, இந்தியாவில் அது 6% ஆக இருக்கும் என்று இப்போது கற்பனை செய்து பாருங்கள். இந்திய நிறுவனங்கள்/பங்குகள் 10% ஆண்டு வருமானம் தருவதாக நினைத்து ஒரு அமெரிக்கர் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடிவு செய்தால், அவர் 4% உண்மையான வருமானத்தை மட்டுமே பெறுவார், ஏனெனில் அந்த 10% இல் 6% பணவீக்கத்தால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மறுபுறம், அமெரிக்க பங்குச் சந்தை வெறும் 5% வருமானத்தை அளிக்கலாம் ஆனால் பணவீக்கம் 0% ஆக இருப்பதால், இறுதி வருமானம் 5% ஆக இருக்கும்.

அத்தகைய சூழ்நிலையில், ஒரு முதலீட்டாளர் இந்தியாவில் எந்த புதிய முதலீடுகளையும் செய்யக்கூடாது; இன்னும் மோசமாக, அவர் உண்மையில் இந்தியாவில் இருந்து பணத்தை எடுத்து அமெரிக்காவில் முதலீடு செய்யலாம். இந்த இரண்டு நடவடிக்கைகளும் டாலருடன் ஒப்பிடுகையில் ரூபாய்க்கான தேவையை குறைக்கும் மற்றும் டாலருக்கு எதிராக ரூபாய் வலுவிழக்கும். மீண்டும், முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து பணத்தை எடுப்பதால் தற்போது இதேபோன்ற ஒன்று நடக்கிறது.

source https://tamil.indianexpress.com/explained/why-is-the-indian-rupee-falling-against-the-us-dollar-8545704

வெள்ளி, 20 டிசம்பர், 2024

அரசியலமைப்பிற்கு எதிரானது

 

பாஜக – ஆர்எஸ்எஸ் சிந்தனை அரசியலமைப்பிற்கு எதிரானது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற தள்ளு முள்ளு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், மல்லிகார்ஜூனே கார்கேவும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ராகுல் காந்தி பேசியதாவது;

“அதானி மீதான அமெரிக்க வழக்கு பற்றிய விவாதத்தை நிறுத்த பாஜக முழு நேரமும் முயற்சித்தது. அந்த விவகாரத்தில் இருந்து திசைதிருப்பவே பல்வேறு வேலைகளில் பாஜக ஈடுபடுகிறது. பாஜக – ஆர்எஸ்எஸ் சிந்தனை அரசியலமைப்பிற்கு எதிரானது. அம்பேத்கருக்கு எதிரானது. அம்பேத்கரின் பங்களிப்பை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்சியினர் அழிக்க விரும்புகின்றனர். அம்பேத்கர் குறித்த கருத்துக்களுக்கு அமித ஷா மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது;

“அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அமித்ஷாவை நீக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்தோம். இது நடைபெறாது என்பது எங்களுக்கு தெரியும். அதனால் போராட்டத்தை கையில் எடுத்தோம். அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய விவகாரத்தை திசைதிருப்ப பாஜக விரும்புகிறது. அதனால் மற்ற விஷயங்கள் குறித்து குரல் எழுப்புகின்றனர். அம்பேத்கர்-நேருவை பாஜக எப்போதும் அவமதித்து வருகிறது இந்த இரண்டு பெரிய தலைவர்களுக்கு எதிராக பாஜக பொய்களை மட்டுமே கூறியுள்ளது.

நாங்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதை பாஜக எம்பிக்கள் தடுத்தனர். அவர்கள் என்னை தள்ளி விட்டனர். நான் நிலைதடுமாறி கீழே உட்கார்ந்தேன். நாங்கள் தினமும் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் வன்முறை எதுவும் நடந்ததில்லை” என தெரிவித்தார்.


source https://news7tamil.live/bjp-rss-ideology-is-against-the-constitution-rahul-gandhi.html

மொசாம்பிக் நாட்டை தாக்கிய #Chido புயல்… உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக உயர்வு!

 

மொசாம்பிக் நாட்டை தாக்கிய #Chido புயல்… உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக உயர்வு!

20/12/24

மொசாம்பிக் நாட்டில் சிடோ புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்ததுள்ளது.

இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சிடோ’ என பெயரிடப்பட்டது. இந்த சிடோ புயல் இந்திய பெருங்கடல் பகுதியில் மடகாஸ்கர் அருகே அமைந்துள்ள மொசாம்பிக் நாட்டை என்ற புயல் தாக்கியது. புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

இந்த புயலின் தாக்கத்தால் 39 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. மேலும், 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். மொசாம்பிக் நாட்டில் சிடோ புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக அந்நாட்டின் கபா டெல்கொடா மாகாணத்தில் மட்டும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். புயலால் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


source https://news7tamil.live/cyclone-chido-hits-mozambique-death-toll-rises-to-73.html

நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள்; லாரி உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

 

medical waste

கேரளாவில் இருந்து இறைச்சி, மருத்துவம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை நெல்லை உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகள் தமிழகத்திற்குள் கொண்டு வரப்பட்டு நெல்லையில் கொட்டப்பட்ட விவகாரத்தில் லாரி உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

கேரளாவில் இருந்து இறைச்சி, மருத்துவம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை நெல்லை உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்பட்டு வருகிறது. திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லி அருகே பழவூர் பகுதியில் தனியார் நிறுவன தோட்டப்பகுதி, அரசு புறம்போக்கு நிலம், வருவாய்த்துறை ஊழியரின் நிலத்தில், திருவனந்தபுரத்திலுள்ள மண்டல கேன்சர் மைய மருத்துவமனை முகவரியுடன் கூடிய மருத்துவக் கழிவுகள், ஊசிகள், உணவுக்கழிவுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், வீட்டுக்கழிவு பொருட்கள் உள்ளிட்டவைகள் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சம்பவ இடத்தில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவ கழிவுகளை தரம் பிரித்து அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக சுத்தமல்லி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

மேலும், அப்பகுதியில் பொருத்தபட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வந்தனர். கேரளாவிலிருந்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டி எரிப்பதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட சுத்தமல்லி பகுதியை சேர்ந்த மனோகர், பேட்டை பகுதியைச் சார்ந்த மாயாண்டி ஆகிய 2 பேரையும் சுத்தமல்லி போலீஸார் கைது செய்தனர்.

கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினிகளை தெளித்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட தடய அறிவியல் துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். 

இதனிடையே, திருநெல்வேலி பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் மற்றும் திடக் கழிவுகளை கேரள அரசு 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று தென் மண்டல பசுமைத் தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/two-arrest-in-connection-with-medical-waste-dumping-from-kerala-in-tirunelveli-8532407

பிளவுபட்ட எதிர்க்கட்சிகள்; அம்பேத்கருக்காக ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம், பேரணி

 

kharge

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரியங்கா காந்தி மற்றும் பிற இந்தியா கூட்டணி எம்.பி-க்கள், பாபாசாகேப் அம்பேத்கர் குறித்த கருத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்யக் கோரி நடைபெற்ற கண்டன ஊர்வலத்தில் பங்கேற்கின்றனர். (PTI புகைப்படம்)

அம்பேத்கர் குறித்த கருத்துக்களுக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்யக் கோரி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் இந்திய அணி எம்.பி.க்கள் நடத்திய போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ராகுல் காந்தி, தனது வழக்கமான வெள்ளை நிற டி-ஷர்ட்டுக்கு பதில் நீல நிறத்தில் (பி.ஆர். அம்பேத்கருடன் தொடர்புடைய வண்ணம்) அணிந்திருந்தார். சபையில், சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் குழுவிடம் சென்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக ராம் கோபால் யாதவ் உள்ளிட்ட சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் தங்களது அடையாளமான சிவப்பு தொப்பியுடன் நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தினர். சமாஜ்வாடி கட்சி. எம்.பி-க்களுடன் ராகுல் காந்தி கைகுலுக்கினார், இரண்டு போராட்டங்களும் விரைவில் இணைந்தன.

அதே நேரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தனது வாட்ஸ்அப் குழுவில் வஞ்சித் பகுஜன் அகாதி தலைவரும், அம்பேத்கரின் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கரின் ட்வீட் ஒன்றை வெளியிட்டது, டி.எம்.சி ராஜ்யசபா தலைவர் டெரெக் ஓ பிரையன் பாபாசாகேப்பை அவமதிக்கும் வகையில் பேசிய அமிஷாவுக்கு எதிராக சிறப்புரிமை நோட்டீஸ் வழங்கியதற்காக நன்றி தெரிவித்தார்.

பாபசாகேப்பை மதிப்பவர்கள் மற்றும் அவருடைய ஒப்பற்ற தன்மையை ஒப்புக்கொண்டவர்களால், பாபாசாகேப் அம்பேத்கரை இழிவுபடுத்தும் கருத்துகளை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.அம்பேத்கருக்கு எதிரான மனப்பான்மைக்கு எதிரான போராட்டம் தெருமுனை முதல் நாடாளுமன்றம் வரை நடத்தப்படும். அத்தகைய மனநிலைக்கு எதிரான போரில் டெரெக் ஒரு பங்குதாரராக இருப்பதில் மகிழ்ச்சி” என்று பிரகாஷ் அம்பேத்கர் எழுதினார்.

அமித்ஷா இப்போது இரண்டு சிறப்புரிமை நோட்டீஸ்களை எதிர்கொள்கிறார், இரண்டாவது மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரால் முன்வைக்கப்பட்டது.

தனித்தனியாக, ஆம் ஆத்மி கட்சி (ஏ.ஏ.பி) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டி.டி.பி தலைவரும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சருமான என் சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோருக்கு - பா.ஜ.க-வின் இரு கூட்டணி தலைவர்கள் - அமித்ஷா ஆகியோர் "நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்" என்று எழுதினார். மேலும், "பாபாசாகேப்பை வணங்குபவர்கள் இனி பா.ஜ.க-வை ஆதரிக்க முடியாது என்று மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்". என்று குறிப்பிட்டுள்ளார்.

“பாபாசாகேப் ஒரு தலைவர் மட்டுமல்ல, நம் தேசத்தின் ஆன்மா. பா.ஜ.க-வின் இந்த அறிக்கைக்குப் பிறகு, இந்த விஷயத்திலும் நீங்கள் ஆழமாக சிந்திப்பீர்கள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று அவர் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாருக்கு எழுதினார்.

ஆம் ஆத்மி கட்சியானது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டது, அதில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட அம்பேத்கர் கெஜ்ரிவாலை ஆசீர்வதிக்கிறார், "பாபாசாகேப் உங்களையும் உங்கள் அரசியலமைப்பையும் அவமதித்தவர்களை நான் எதிர்த்துப் போராடுவதற்கு எனக்கு வலிமை கொடுங்கள்" என்று கெஜ்ரிவால் கேட்கிறார்.

அதானி மற்றும் இவிஎம் விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவர்களுக்கிடையே பல நாட்களாக வளர்ந்து வரும் கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து திரள்வதற்கான ஒரு சிக்கலைக் கண்டறிந்துள்ளன.

வியாழக்கிழமை நடந்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தவிர, சிவசேனா (யு.பி.டி) எம்.பி.க்களும் இருந்தனர். வி.டி. சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்தியின் சமீபத்திய கருத்துக்களால் வருத்தப்பட்ட சிவசேனா (யு.பி.டி), டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என்று தெளிவுபடுத்திய ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்களும் இருந்தனர்.

வியாழக்கிழமை நடந்த காங்கிரஸின் போராட்டத்தில் இருந்து டி.எம்.சி மீண்டும் ஒரு குறிப்பிட்ட தூரத்தைக் கடைப்பிடித்தாலும், பிரச்னையைப் பொறுத்தவரை அது ஒரே பக்கத்தில் உள்ளது.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான சிறப்பு விவாதம் முழுவதும் பா.ஜ.க-வின் தாக்குதலுக்கு இலக்கான காங்கிரஸுக்கு, ஆளும் கட்சியை நோக்கிய இந்த போராட்டம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், இந்த விவகாரம் அரசியல் சாசனத்தை மையமாகக் கொண்ட பா.ஜ.க எதிர்ப்பு பிரச்சாரத்துடன் ஒத்துப்போகிறது, இதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார்.


source https://tamil.indianexpress.com/india/ambedkar-opposition-parliament-protest-rally-amit-shah-remarks-8532397

வியாழன், 19 டிசம்பர், 2024

தமிழ்நாடு வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய எம்பிக்கள்

 

மின்னணுத் துறையில் புதுமை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க, செமி கண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என கனிமொழி எம்பி கோரிக்கை வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே திமுக எம்பிக்கள் மத்திய அரசிடம் பல கேள்விகளை முன்னிறுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்களால் எழுப்பப்பட்ட கேள்விகள் என்ன என்பது குறித்து இங்கு காண்போம்.

செமி – கண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் – திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. கோரிக்கை!

    நாடாளுமன்ற மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனிமொழி கருணாநிதி, விதி எண் 377இன் கீழ் முக்கிய பிரச்சினை ஒன்றை எழுப்பினார். அவர் பேசியதாவது;

    “மின்னணுத் துறையில் செமி கண்டக்டர் உற்பத்தி என்கிற மிக முக்கியமான விவகாரம் பற்றியும், அதில் தமிழ்நாட்டின் முக்கியப் பங்கு பற்றியும் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். உலக அளவில் செமி கண்டக்டர் சிப்ஸ் இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த இறக்குமதி 92% அதிகரித்துள்ளது.

    செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவு நோக்கிய முன்னேற்றங்கள் இருந்த போதிலும் சமீபத்தில் மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 3 செமி கண்டக்டர் உற்பத்தி அலகுகளில் ஒன்று கூட இத்துறையில் ஆற்றல் மிக்க தென் மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

    2023-24 காலகட்டத்தில் இந்தியாவின் மின்னணு சாதன மொத்த ஏற்றுமதியில், 40% தமிழ்நாட்டின் பங்களிப்பாக இருக்கிறது. இதில் உலகத்தரம் வாய்ந்த செமி கண்டக்டர் வடிவமைப்பு நிறுவனங்கள், மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் உட்பட்டவையாகும். மேலும், தமிழ்நாட்டின் 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் விஎல் எஸ்ஐ (VLSI) மற்றும் நானோ தொழில்நுட்பத்தில் சிறப்பு படிப்புகளை வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுதோறும், 1.13 லட்சம் இளைஞர்கள் டிப்ளோமா மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களில் பட்டம் பெறுகிறார்கள்,

    மேலும் ஒவ்வொரு ஆண்டும் 494 ஐடிஐகள் செமிகண்டக்டர் தொழிலுக்குத் தேவையான வகையில் 700 படிப்புகளை வழங்குகின்றன. தமிழ்நாட்டின் மேம்பட்ட தொழில் சூழல் மற்றும் திறமையான தொழிலாளர்கள் இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் இலக்குகளை விரைந்து எட்டுவதற்கு தங்கள் தனித்துவமான பங்கை வழங்கி வருகின்றனர். எனவே இந்தத் துறையில் புதுமை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க, செமி கண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டுக்கு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

    வானிலை அறிவிப்பு தொழிற்நுட்பத்தை மேம்படுத்துக! மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் கோரிக்கை!

      தமிழ்நாடு கடற்கரையோரங்களில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் மக்களவையில் கோரிக்கை வைத்துள்ளார்.

      மேலும் அவர் தனது அறிக்கையில், தமிழ்நாட்டின் கடற்கரையோரங்களில் தற்போது செயல்பாட்டில் உள்ள வானிலை முன்னறிவிப்பு நிலையங்கள் எத்தனை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாடு கடற்கரையோர பகுதிகளில் கூடுதலாக வானிலை முன்னறிவிப்பு வசதிகளை அமைப்பதற்கான திட்டங்கள் மற்றும் அவை அமைப்பதற்காக நிர்ணயம் செய்திருக்கும் கால இலக்குகள், நாடு முழுவதும் புதிதாக 56 டாப்ளர் ரேடார்களை நிறுவுவதாக முன்மொழியப்பட்ட திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள கரையோரங்களில் எந்தெந்த பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டில் வானிலை முன்னறிவிப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த பட்ஜெட் ஒதுக்கீடுகள் போன்ற விவரங்கள் உள்ளடக்கிய விரிவான அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

      விவசாய ஆலோசனை சேவைகள் – தனியார்மயமாக்கலை தவிர்த்திடுக – தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்!

        நாட்டின் விவசாய ஆலோசனை சேவைகளின் தற்போதைய நிலை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்.

        நிதி ஆயோக் பரிந்துரையின்படி மாவட்ட வேளாண் வானிலை ஆய்வு அலகுகளை (DAMUs) தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என்றும் அப்படியென்றால், அரசு இம்முடிவெடுப்பதற்காக மேற்கொண்ட ஆய்வுகள் அல்லது தரவுகளின் விவரங்களை வெளியிட வேண்டும் என கேட்டுள்ளார். அரசின் தனியார்மயமாக்கும் முடிவால் சிறு விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்த அவர், அது குறித்து மத்திய அரசு ஆய்வுகள் மேற்கொண்டிருந்தால் அதன் விவரங்களையும் வெளியிட வேண்டும் என கோரியுள்ளார்.

        தமிழ்நாடு முழுவதும் தண்டவாளங்களை மேம்படுத்த வேண்டும்! ஆரணி திமுக எம்.பி. எம்.எஸ். தரணிவேந்தன் கோரிக்கை!

          தமிழ்நாட்டில் ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்துவதற்கு தண்டவாளங்களை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்களவையில் ஆரணி திமுக எம்.பி. எம். எஸ். தரணிவேந்தன் கோரிக்கை வைத்துள்ளார்.

          கடந்த மூன்றாண்டுகளில் வழித்தட மேம்பாடு மற்றும் அதன் பாதுக்காப்பை மேம்படுத்துதல், வேகத்தை அதிகப்படுத்தும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்ட நிதித்தொகை திட்டங்களை முடிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட கால இலக்கு ஆகியவற்றையும் அறிவிக்குமாறு அவர் கோரியுள்ளார். அதேபோல் மத்திய அரசு அரசு மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து இத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும், திட்டங்களின் நிலையை அவ்வப்போது கண்காணித்து பொதுமக்களுக்கு அறிக்கை வெளியிடுவதற்கான வழிமுறைகளையும் மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

          சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைகளை கடைப்பிடிக்க நடவடிக்கை என்ன? திமுக எம்.பி. எம். எம். அப்துல்லா கேள்வி!

            குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைகளை கடைப்பிடித்திட மத்திய அரசு ஆதரவளிக்கிறதா? என்றும், இத்தகைய முயற்சிக்கு உறுதுணையாக இருப்பதற்கு தனித்துவமான ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு மையங்களை நிறுவ மத்திய அரசு ஏதேனும் திட்டங்களை வைத்திருக்கிறதா? என்றும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சந்தை பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம். எம். அப்துல்லா மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.

            வீடுகளுக்கு குறைந்த விலையில் சூரிய மின்தகடுகள் – அரக்கோணம் திமுக எம்.பி. எஸ். ஜெகத்ரட்சகன் கோரிக்கை!

              நாடு முழுவதும் சூரிய ஒளி மின்சாரத்தை முதன்மை மின்சார ஆதாரமாக பயன்படுத்துவது எனும் இலக்கிற்கேற்ப தொழிற்சாலைகள், தனியார் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் சூரிய மின் தகடுகள் பொருத்துவதற்கு மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து அரக்கோணம் திமுக எம்.பி. எஸ். ஜகத்ரட்சகன் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

              தொழிற்சாலை சார்ந்த மின்சார பயன்பாட்டிற்கான கட்டமைப்புகளை தற்போதுள்ளதைவிட குறைந்த செலவில் உருவாக்கும் திட்டங்கள் குறித்தும் அவர் விவரங்கள் கேட்டுள்ளார்.

              19 12 2024 



              source https://news7tamil.live/from-semiconductors-to-weather-forecasting-technology-dmk-mps-raised-their-voices-in-parliament-for-the-development-of-tamil-nadu.html

              ஆப்பிரிக்காவை புரட்டிப்போட்ட #Chido புயல்… உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்வு!

               

              ஆப்பிரிக்காவை புரட்டிப்போட்ட #Chido புயல்… உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்வு! 19 12 2024

              சிடோ புயல் தாக்கத்தால் மொசாம்பிக் நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்ததுள்ளது.

              இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சிடோ’ என பெயரிடப்பட்டது. இந்த புயல் கடந்த சில நாட்களாக கிழக்கு ஆப்பிரிக்கா அருகே கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக மலாவி நாட்டில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

              மேலும், அண்டை நாடான மொசாம்பிக்கையும் ‘சிடோ’ புயல் தாக்கியது. குறிப்பாக நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், அங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புயல் காரணமாக மொசாம்பிக் நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்ததுள்ளது.

              மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


              source https://news7tamil.live/cyclone-chido-that-swept-africa-death-toll-rises-to-45.html