/indian-express-tamil/media/media_files/2026/01/28/aadhaar-2026-01-28-08-21-32.jpg)
இந்தியக் குடிமக்களின் அன்றாட வாழ்வில் ஆதார் அட்டை என்பது பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. செல்போன் இணைப்பு பெறுவது முதல், வங்கிச் சேவைகள், அரசு மானியங்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்வது வரை அனைத்து இடங்களிலும் 12 இலக்க ஆதார் எண் அத்தியாவசியத் தேவையாக உள்ளது. மக்களின் இந்தத் தேவைகளை மேலும் எளிதாக்கும் வகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இன்று ஜனவரி 28 முதல் ஆதாரின் முழுமையான பதிப்பு செயலியைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
இதுவரை மக்கள் சந்தித்து வந்த முக்கியமான சிக்கல்களான ஆதார் அட்டையைத் தொலைப்பது, பழைய மொபைல் எண்களை மாற்ற முடியாமல் தவிப்பது போன்ற பிரச்சினைகளுக்கு இந்த புதிய செயலி மிகச்சிறந்த தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, விமான நிலையங்கள் அல்லது அரசு அலுவலகங்களில் தங்களின் அசல் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல மறந்தாலும், இந்த செயலி மூலம் டிஜிட்டல் முறையில் உடனடியாக அடையாளத்தைச் சமர்ப்பிக்க முடியும்.
புதிய செயலியின் முக்கிய சிறப்பம்சங்கள்:
இந்த மேம்படுத்தப்பட்ட செயலியில் பாதுகாப்பு மற்றும் பயனர் வசதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'தேர்ந்தெடுக்கப்பட்ட பகிர்வு' என்ற அம்சம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒருவர் தனது முழு விவரங்களையும் பகிராமல், குறிப்பிட்ட சேவைக்குத் தேவையான தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்ள முடியும். இது தரவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், பயனர்கள் தங்கள் விரல் ரேகை உள்ளிட்ட உயிரியல் அடையாளங்களை ஒரு தொடுதல் மூலம் முடக்கி வைக்கும் 'பயோமெட்ரிக் லாக்' வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும், ஒரே போனில் குடும்ப உறுப்பினர்கள் பலரின் ஆதார் விவரங்களைப் பராமரிக்கும் வகையில் 'குடும்பக் கணக்குகள்' மேலாண்மை வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இணைய வசதி இல்லாத இடங்களிலும் அடையாளத்தை உறுதிப்படுத்த 'ஆஃப்லைன் சரிபார்ப்பு' முறையை இந்த செயலி ஆதரிக்கிறது.
அனைத்து பயனர்களும் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு வசதி தற்போது சாத்தியமாகியுள்ளது. இனி எங்கும் எப்போது வேண்டுமானாலும் உங்கள் முகத்தை அடையாளமாகப் பயன்படுத்தி, உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை நீங்களே புதுப்பித்துக் கொள்ள முடியும். இந்த நவீன மாற்றங்கள் மூலம், ஆதார் தொடர்பான சேவைகளுக்காக மக்கள் இனி அலைய வேண்டிய அவசியம் இருக்காது.
source https://tamil.indianexpress.com/technology/uidai-to-launch-aadhaar-app-full-version-check-top-5-features-11035547





