புதன், 28 ஜனவரி, 2026

ஐரோப்பாவில் இனி எளிதாகப் படிக்கலாம், பணியாற்றலாம்: இந்தியர்களுக்கான விசா கட்டுப்பாடுகள் தளர்வு

 

education

இந்தியத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் எளிதாகக் குடியேறிப் பணியாற்றுவதை உறுதி செய்யும் வகையில், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவான இடப்பெயர்வு மற்றும் போக்குவரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்கா போன்ற நாடுகள் விசா விதிமுறைகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஐரோப்பாவின் இந்த முன்னெடுப்பு இந்திய இளைஞர்களுக்குப் புதிய கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது.

தடையற்ற கல்வி மற்றும் வேலைவாய்ப்பு டெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் போது இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதன் கீழ், இந்திய மாணவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் கல்வி பயில எண்ணிக்கை உச்சவரம்பு இல்லாத வாய்ப்புகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது. தற்போது ஐரோப்பா முழுவதும் சுமார் 1.20 லட்சம் இந்திய மாணவர்கள் உள்ளனர். குறிப்பாக ஜெர்மனியில் மட்டும் 50,000 பேர் பயின்று வருகின்றனர். இந்த புதிய ஒப்பந்தம் மூலம், மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு அங்கேயே தங்கிப் பணியாற்றுவதற்கான சூழல் மேலும் எளிதாகும்.

ஒரே இடத்தில் அனைத்துத் தகவல்களும் பணியாளர்களின் வசதிக்காக ஐரோப்பிய சட்ட நுழைவாயில் அலுவலகம் என்ற புதிய மையம் தொடங்கப்பட உள்ளது. இது ஒரு ஒன்-ஸ்டாப் ஹப் போலச் செயல்பட்டு, ஐரோப்பாவிற்குச் செல்ல விரும்பும் இந்தியர்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கும். முதற்கட்டமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும்.

தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிப் பங்களிப்பு இந்த ஒப்பந்தத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, உலகின் மிகப்பெரிய பொது ஆராய்ச்சித் திட்டமான ஹொரைசன் ஐரோப்பா திட்டத்தில் இந்தியா இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. இது செயற்கை நுண்ணறிவு, தூய்மையான எரிசக்தி மற்றும் சுகாதாரத் துறையில் பணியாற்றும் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கும் உலகளாவிய வாய்ப்புகளை வழங்கும் என ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.

பரஸ்பரப் பயன் ஐரோப்பிய நாடுகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை சுமார் 60 லட்சம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தட்டுப்பாட்டைப் போக்க இந்தியாவின் திறமையான பொறியாளர்கள், செவிலியர்கள், கவனிப்புப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பெரும் உதவியாக இருப்பார்கள். அதேவேளையில், ஐரோப்பாவின் மூலதனமும் தொழில்நுட்பமும் இந்தியாவின் மனித வளத்தோடு இணையும்போது இரு தரப்பிற்கும் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும் எனத் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் வசித்து வரும் நிலையில், இந்த புதிய ஒப்பந்தம் சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான குடியேற்றத்தை ஊக்குவிப்பதோடு, முறையற்ற இடப்பெயர்வுகளைக் கட்டுப்படுத்தவும் வழிவகை செய்கிறது.


source https://tamil.indianexpress.com/education-jobs/india-eu-mobility-pact-a-new-era-of-opportunities-for-indian-students-and-professionals-11035524