ஞாயிறு, 26 ஜனவரி, 2025

காற்று மாசுபாட்டால் திணறும் பாங்காக் – 350 பள்ளிகள் மூடல் !

 உலகில் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மற்றும் இரசாயனங்கள் காற்றில் வெளியேறும் போது காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக உலகம் வெப்பமயமாதல், கடல் நீர் மட்டம் உயர்வு, அதீத கனமழை மற்றும் வறட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

மேலும் ஆங்காங்கே காட்டுத்தீயும் பற்றி எரிந்து வருவதால் காற்று மாசுபாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது. இதற்கிடையே ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உலகின் காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் பட்டியலில் தாய்லாந்து தலைநகர் பாங்காக் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

அண்டை நாடான வியட்நாம், கம்போடியாவில் உள்ள நகரங்களும் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. அதாவது அங்கு வசிப்பவர்கள் மோசமான காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் விவசாய கழிவுகளை எரிக்க தாய்லாந்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உள்துறை அமைச்சர்அனுடின் சார்ன்விரகுல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல் மாணவர்களின் நலன் கருதி தலைநகர் பாங்காக்கில் 352 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. மேலும் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்கும்படி தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் தலைநகர் பாங்காக்கில் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து காற்று மாசுபாட்டை குறைக்க அனைவரும் பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக அடுத்த ஒரு வாரத்துக்கு பேருந்து, ரயில் போன்றவற்றில் இலவசமாக பயணம் செய்ய போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/bangkok-suffocates-due-to-air-pollution-350-schools-closed.html