புதுச்சேரி, திருவண்டார்கோவிலில் இந்திய உணவுக் கழக சேமிப்பு குடோன் உள்ளது. இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை கடந்த ஒரு வாரமாக அதிகாரிகள் தணிக்கை மேற்கொண்டனர்.அப்போது அரிசி மூட்டைகளின் எண்ணிக்கை குறைவது தெரிய வந்தது. இது குறித்து இந்திய உணவுக்கழக மண்டல அதிகாரி திருபுவனை போலீசில் புகார் கொடுத்தார்.
மேற்கு எஸ்.பி., வம்சிதரெட்டி மேற்பார்வையில் திருபுவனை இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் (பொ) ஆகியோர் வழக்கு பதிந்து, விசாரித்தனர். அதில், திருவண்டார்கோவில் இந்திய உணவுக் கழகத்தில் குடோன் மேலாளர்களாக பணியாற்றி வரும் அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் மகன் குணாளன், 34; பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுனில்குமார், 41; வில்லியனுார் கோகுல்ராஜ், 33; கண்டமங்கலம் லாரி உரிமையாளர் ஜெயசீலன், 44, சின்னபாபுசமுத்திரம் லாரி டிரைவர் மருதுபாண்டி, 35, ஆகியோர் 450 அரிசி மூட்டைகளை லாரியுடன் கடத்திச் சென்றது தெரிய வந்தது. அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அரிசி மூட்டைகளை கடத்தி சென்று, ஏம்பலத்தில் உள்ள செவன் ஸ்டார் ரைஸ் மில் வளாகத்தில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. 450 அரிசி மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
source https://tamil.indianexpress.com/india/police-arrest-five-people-including-three-officials-of-food-corporation-of-india-in-smuggling-450-bags-rice-worth-rs-8-lakh-8674996