திமுக சார்பில் சென்னை பல்லாவரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
“தமிழை தமிழ் என்று சொல்லி அழைப்பதைவிட வேறு எதுவும் இன்பமாக இருக்க முடியாது. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். இன்றும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்தியை திணிக்கலாமா, சமஸ்கிருதத்தை திணிக்கலாமா என மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையை உருவாக்க தான் திமுக பாடுபட்டது.
தற்போது அதற்கு சிக்கலை ஏற்படுத்த தான் மும்மொழி கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது. தேசிய கல்வி கொள்கையை கொண்டு வருவதே இந்தி அல்லது சமஸ்கிருதை திணிப்பற்கு தான். ஆரிய மொழியை தமிழில் நேரடியாக திணிக்க முடியாமல் கல்வி மூலம் திணிக்க முயற்சி நடக்கிறது. முதலில் இந்தியை கையில் எடுத்து அதன் பிறகு சமஸ்கிருதம் கொண்டு வருவார்கள இந்தி மொழியை எல்லா இடத்திலும் ஆதிக்க மனப்பான்மையுடன் திணிக்கின்றனர். நிதியை தர மறுக்கின்றார்கள்.
அன்னை தமிழை அழிக்க அந்நிய இந்தி நுழைக்கப்படுகிறது. இந்தியை அல்ல, எத்தனை மொழிகளை திணித்தாலும் நம் தமிழ் அழிந்துவிடாது. ஆனால் தமிழரின் பண்பாடு அழிந்துபோகும் என பெரியார் சொன்னார். இந்தி திணிப்பை முதலில் எதிர்த்தது பெரியார். 1948-ல் அண்ணா போராட்டத்தை நடத்தினார். 1963-ல் கருணாநிதி தலைமையில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது.
மொழிப்போராட்டத்தின் மையப்புள்ளியாக திமுக இருந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பலர் தங்களது உயிர்களை நீத்தனர். உயிர்நீத்த தியாகிகள்தான் தமிழ்த்தாயின் மூத்த பிள்ளைகள். அதன் மூலம் தமிழகத்தை இருமொழிக் கொள்கை கொண்ட மாநிலமாக பாதுகாத்தோம்.
மொழிப்போர் இன்னும் முடியவில்லை. இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மீண்டும் மும்மொழிக் கொள்கையை புதிய கல்விக் கொள்கை மூலம் திணிக்க முயற்சி நடைபெறுகிறது. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மூலம் இந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர். பல்கலை கழக வேந்தராக ஏன் முதல்வர்கள் இடம் பெற கூடாது. யுஜிசி புதிய வரைவு விதிகளுக்கு எதிராக திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து மாபெரும் போராட்டம் நடைபெறும்”
source https://news7tamil.live/protest-against-ugc-new-draft-rules-chief-minister-m-k-stalins-announcement.html