சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் வாக்குமூல வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு விசாரணை குழுவை மாற்றி அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் தாக்கியது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்ததுடன் சென்னை பெருநகர காவல் இணை ஆணையர் சரோஜ் குமார் தாக்கூர் தலைமையில் ஆவடி சரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்குத் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், சிறப்பு விசாரணைக்குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகளில் ஒருவரான இணை ஆணையர் சரோஜ் குமார் தாக்கூர் மத்திய பணிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், பிரதான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம்பெற்றுள்ள ஆவடி சரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால் மற்றும் சேலம் மாநகர வடக்குத் துணை ஆணையர் பிருந்தா அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் தொடர்பான வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இந்த இரண்டு எப்.ஐ.ஆர் தொடர்பாக விசாரிப்பதற்கு வேறு குழுவை நியமிக்க வேண்டும். சிறுமியின் வாக்குமூலம் வெளியான விவகாரம் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் சைபர் கிரைம் பிரிவு அதிகாரியை நியமிக்கலாம் என்று தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரண்டு எப்.ஐ.ஆர் தொடர்பாக சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் பக்கெர்லா சிபஸ் கல்யாண் தலைமையில் சைபர் கிரைம் ஆய்வாளர்கள் சாந்தி தேவி மற்றும் பிரவின் குமார் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-order-special-investigation-team-changed-in-anna-nagar-10-year-old-girl-sexual-assault-case-8651653