கொல்கத்தா மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட நபரை குற்றவாளி என தீர்ப்பளித்து சியல்டா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி, கொல்கத்தாவில் மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில், 31 வயதான பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது சடலம் மருத்துவமனையில் கருத்தரங்கம் நடைபெறும் அரங்கில் இருந்து கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பலரும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த நவம்பர் மாதம் 11-ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வந்தது. கல்கொத்தா உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, காவல் துறையினரிடமிருந்து சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. மேலும், சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த விசாரணை கடந்த ஜனவரி 9-ஆம் தேதி நிறைவுபெற்றது. அதன்படி, இன்றைய தினம் வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராயை குற்றவாளி எனக் கூறி சியல்டா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் மீது 45 பக்கங்களில் சார்ஜ் ஷீட் பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில், சஞ்சய் ராய் தான் குற்றத்தை செய்தார் என்பதற்காக 11 ஆதாரங்கள் புலப்படுவதாக கூறிய நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்தது. இந்நிலையில், சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரங்கள் குறித்து வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/india/sanjay-roy-convicted-as-guilt-in-kolkata-doctor-rape-and-murder-case-8632602