பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பெரியார் உணர்வாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இன்று நாம் தமிழர் கட்சியினர் கொத்து கொத்தாக தி.மு.க-வில் இணைந்திருக்கின்றனர். இந்த நிலையில் திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரா என பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார் டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ். சீமானைத் தான் குறிப்பிட்டு அவர் பதிவிட்டு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் குறித்து சில கருத்துக்களை பேசியது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பிரபாகரனுடன் சீமான் இருந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறியதும் சீமானுக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், இன்று கோவையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த சீமான், தகாத வார்த்தைகளால் பதில் அளித்தது தற்போது வைரலாகி வருகிறது. சீமானின் அநாகரீக பேச்சுக்கு பல்வேறு அமைப்புகளும், பத்திரிகையாளர் சங்கங்களும் கண்டன குரல்களை எழுப்பியுள்ளனர்.
இப்படியாக அடுத்தடுத்து சீமானுக்கு சிக்கல் வரும் நிலையில் ஐபிஎஸ் அதிகாரியும், திருச்சி டிஐஜியுமான வருண்குமாரும் அவதூறு வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அதில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே வருண்குமார் ஐ.பி.எஸ் சீமான் இடையே வார்த்தை போர் நடந்து வரும் நிலையில் தனது குடும்பத்தினரை அவதூறாக சித்தரித்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ள அந்த வழக்கில் தான் சீமான் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த நிலையில் வருண்குமார் ஐ.பி.எஸ் இன் பேஸ்புக் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், “கொஞ்சநஞ்சம் பேச்சா.. திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால் உழைத்து படித்து முன்னேறியவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்..” என கையில் லத்தியுடன் பதிவிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானை குறிப்பிட்டு தான் டி.ஐ.ஜி வருண்குமார் ஐ.பி.எஸ் பதிவிட்டு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/dig-varunkumar-social-media-viral-post-seeman-controversy-8650999