செவ்வாய், 14 ஜனவரி, 2025

அண்ணா பல்கலை. பாலியல் குற்றவாளி ஆக்கிரமித்த கோயில் நிலம் மீட்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

 

News Highlights: கோயில்கள் திறப்பு எந்த கட்சிக்கும் வெற்றி அல்ல- அமைச்சர் சேகர் பாபு

கோயில் நிலம் மீட்கப்படும் - சேகர்பாபு

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனின் வீடு சென்னையில் உள்ள கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்தது.

இந்நிலையில் அது விசாரிக்கப்பட்டு நிலம் உண்மையிலேயே ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும் அந்த நிலம் மீட்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று (ஜன13) தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, "அந்த கோவில் நிலத்தில் ஞானசேகரன் வீடு உள்பட மொத்தம் 16 ஆக்கிரமிப்புகள் உள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் ஞானசேகரனின் தந்தை பெயரில் உள்ளது. ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் முன் பகுதி சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது, ஆக்கிரமிப்புகளை அகற்ற நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்றார்.

ஆக்கிரமிப்பாளர்கள் 2003 முதல் அங்கு வசித்து வருவதால், அவர்களை குத்தகைதாரர்களாக மாற்றலாமா? அல்லது அவர்களை வெளியேற்றலாமா? என்று எங்கள் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர் என்று சேகர்பாபு கூறினார். 

தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் 7,000 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்பாளர்கள் யாராக இருந்தாலும் அரசு நிலத்தை மீட்கும்" என்றும் அமைச்சர் கூறினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/temple-land-encroached-by-au-rape-accused-to-be-retrieved-minister-8619779