HMPV வைரஸ் தொற்று குறித்து அச்சப்பட தேவையில்லை” – பொது சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்!
HMPV வைரஸ் தொற்று பரவல் குறித்து இந்தியர்கள் அச்சப்பட தேவையில்லை என பொது சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
கோவிட் தொற்றை தொடர்ந்து தற்போது சீனாவில் மனித மெட்டாப் நியூமோ வைரஸ் (HMPV) தொற்று அதிகமாக பரவி வருகிறது. அதிக வைரஸ் பரவலால் மருத்துவமனைகள் நிரம்பி காணப்படுகின்றன. HMPV, இன்ஃப்ளூயன்ஸா A, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட்-19 போன்ற பல வைரஸ்கள் ஒரே நேரத்தில் பரவி வருவதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் இந்த சுவாச நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர். சீனாவில், HMPV, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இடையேயும், குறிப்பாக வடக்கு மாகாணங்களில் அதிக பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், சீனாவில் பரவும் HMPV வைரஸ் தொற்று குறித்து இந்தியர்கள் அச்சப்பட தேவையில்லை என பொது சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பொது சுகாதார இயக்குநர் ஜெனரல் அதுல் கோயல் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“சீனாவில் எச்எம்பிவி வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது என்று செய்திகள் வந்துள்ளன. இந்த வைரஸ் சுவாச வைரஸ் போன்றது. இது பெரும்பாலும் பெரியவர்களுக்கும் 1 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கும் வைரஸ் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. குளிர்காலத்தில் சுவாசக் கோளாறுகள் பொதுவானவை. அவற்றைச் சமாளிக்க இந்தியாவில் உள்ள மருத்துவமனைகள் தயாராக இருக்கின்றன.
இந்த தொற்று குறித்து பயப்பட தேவையில்லை. குளிர் காற்று மற்றும் காற்றின் மோசமான தரக் குறியீட்டின் காரணமாக, குளிர்காலக் காலங்களில் சுவாச நோய்கள் பொதுவாகவே ஏற்படுகின்றன. இந்தியாவில் இதுவரை யாருக்கும் இந்த தொற்று பாதிப்ப்பு ஏற்படவில்லை” என்றார்.
HMPV என்றால் என்ன?
HMPV என்பது respiratory syncytial virus (RSV), மீசிலெஸ், மம்ஸ் போன் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. HMPV என்பது சுவாச தொற்றுநோய் வைரஸ் ஆகும். இது மேல் மற்றும் கீழ் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் அனைத்து வயதினருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் முதன்முதலாக 2001-ல் கண்டறியப்பட்டது.
HMPV இன் அறிகுறிகள் என்ன?
HMPV இன் அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்த்தொற்றுகளின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். இருமல், காய்ச்சல், நாசி நெரிசல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். கடுமையாகும் போது
மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியாவுக்கு வழிவகுக்கலாம்.
source https://news7tamil.live/there-is-no-need-to-panic-bout-hmpv-virus-infection-public-health-directorate-advises.html