மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007ஆம் ஆண்டிற்கு பிறகு முதல்முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் லாபம் ஈட்டியுள்ளது. நெட்வொர்க் விரிவாக்கம், செலவு குறைப்பு, வாடிக்கையாளர் சேர்க்கை போன்றவை இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
தனியார் நிறுவனங்களின் போட்டியால் நஷ்டத்தை சந்தித்து வந்த பிஎஸ்என்எல் தற்போது லாபத்தை ஈட்டியுள்ளது. இதுதொடர்பாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
2007-ஆம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது. இந்த சாதனையானது புதிய கண்டுபிடிப்பு, செலவைக் குறைத்தல், பயன்பாட்டாளரை மையப்படுத்திய சேவை முன்னேற்றம் ஆகியவற்றில் நிறுவனம் கவனம் செலுத்தியதைப் பிரதிபலிக்கிறது.
பிஎஸ்என்எல் வெற்றிகரமாக தனது நிதிச் செலவையும், ஒட்டுமொத்த செலவினத்தையும் குறைத்ததால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நஷ்டம் குறைந்தது.
இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியை அதிகரிக்கும் அதே வேளையில் உயர்தரமான கட்டுப்படியான செலவில் தொலைத்தொடர்பு சேவைகள் வழங்குவதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த நிதி நிலைமை சுட்டிக்காட்டுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மாற்றத்திற்கான பயணத்தில் உறுதியான ஆதரவை வழங்கியுள்ள பயன்பாட்டாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர், மத்திய அரசு ஆகியோருக்கு இந்த தருணத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராபர்ட் ஜெ ரவி நன்றி தெரிவித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/bsnl-earns-profit-of-rs-262-crore-after-17-years.html