புதன், 19 பிப்ரவரி, 2025

தமிழைக் காக்க உயிரையும் விட தயார்” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

 

மும்மொழிக் கொள்கை மற்றும் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காததை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,  திருமாவளவன் எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,

“இந்த ஆர்ப்பாட்டத்தில் நான் துணை முதலமைச்சராகவோ, அமைச்சராகவோ, இளைஞர் அணி செயலாளராகவோ கலந்து கொள்ளவில்லை, திமுக தொண்டர்களின் ஒருவனாகத்தான் கலந்து கொள்கிறேன். எந்த காலத்திலும் அடக்குமுறைக்கு நாம் அடிபணிய மாட்டோம். இது  பாஜக அரசுக்கு புரிய வேண்டும் என்று தான் இந்த ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாட்டுக்கு  ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் கூட உச்சரிக்கப்படவில்லை. கடந்த டிசம்பர் மாதம் பல்வேறு மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்பட்டது. அப்போதும் ஒரு ரூபாய் கூட தரவில்லை. தற்போது  கல்வித்துறைக்கு வரவேண்டிய தொகையை கொடுக்கவில்லை. வெளிப்படையாகவே தர்மேந்திர பிரதான் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி கொடுப்போம் என்று கூறுகிறார்.

நாங்கள் உங்கள் அப்பா வீட்டு சொத்தை கேட்கவில்லை. கேட்க வேண்டிய முறையில் கேட்டால்தான் அவர்கள் காதில் விழுகிறது. மக்கள் கொடுத்த வரியைத்தான் நிதியாக கேட்கிறோம். இந்தியை தமிழ்நாட்டுக்குள் திணித்து தமிழின் பண்பாட்டை மாற்ற நினைக்கிறார்கள். இன்று தமிழர்கள்  பல்வேறு  துறைகளில் வேலை பார்த்து வருகின்றனர். இஸ்ரோவுடைய தலைவரே தமிழர் தான். அவர்களில் பெரும்பாலானோர் அரசு பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையை கற்றவர்கள்தான். இதனை மத்திய அரசு பாராட்ட கூட வேண்டாம்.  அதற்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று தான் கூறுகிறோம்.

இந்தி திணிப்பை எதிர்த்து எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். இதையெல்லாம் மறந்துவிட்டு உங்களுடைய மிரட்டலுக்கு நாங்கள் அடிபணிவோம் என்று நினைத்தால் அது கனவில் கூட நடக்காது. தமிழ்நாட்டிற்கு  நியாயமாக கொடுக்க வேண்டியதை கொடுங்கள் என்று கேட்கிறோம்.  கட்சி பெயரில் அண்ணாவையும் திராவிடத்தையும் வைத்துக்கொண்டு ஒதுங்கி நிற்காதீர்கள், நீங்களும் இதனை எதிர்க்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் நின்று மும்மொழிக் கொள்கையை எதிர்க்க வேண்டும். ஆதலால் நீங்களும் வாருங்கள்.

தமிழைக் காக்க எங்கள் உயிரையும் விட தயாராக இருக்கிறோம் என்பதை நாங்கள் தெரியப்படுத்திக் கொள்கிறோம். எங்களின் பிள்ளைகளின் கல்வியோடு விளையாடாதீர்கள்.  விரைவில் நிதி வழங்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் போராட்ட களமாக மாறும் . அது போராட்டமாக மாறுவதும் மாறாததும் பாஜக கைகளில் தான் இருக்கிறது. போன முறை ‘கோ பேக் மோடி’ என்று சொல்லி துரத்திய தமிழர்கள், நிதி வழங்கவில்லை என்றால் ‘கெட் அவுட்’ மோடி என்று சொல்லித்தான் துரத்துவார்கள்”

இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



source https://news7tamil.live/we-are-ready-to-give-our-lives-to-protect-tamil-deputy-chief-minister-udhayanidhi-stalins-speech.html