திங்கள், 10 பிப்ரவரி, 2025

#China-வை புரட்டிப் போட்ட நிலச்சரிவு… 30 பேர் மாயம்!

 


சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனையடுத்து, அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மண்ணுக்குள் புதைந்த 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அந்தப் பகுதியில் வசித்து வந்த சுமாா் 200 போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா். இந்த நிலச்சரிவில் சிக்கி 30 பேர் மாயமாகியுள்ளனர்.
அவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்நாட்டு அதிகாரிகள் உடனடியாக மாயமானவர்கள் தேடி மீட்குமாறும், இந்த நிலச்சரிவுக்கான காரணத்தை கண்டறியவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அந்நாட்டு பிரதமர் லி கியாங் அப்பகுதியை சுற்றியுள்ள இடங்களின் புவியியல் குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ளுமாறும், ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு மற்றொரு பேரிடர் ஏற்படாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். சீனாவில் நீண்ட காலமாகப் பெய்யும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று உள்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.

கடந்த 6 மாதங்களாக மலையிலிருந்து பெரிய பாறைகள் அடிக்கடி உருண்டு வருவதை காண முடிந்ததாக கிராமவாசிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கி 30 பேர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

09/02/2025


source https://news7tamil.live/landslide-that-swept-through-china-30-people-missing.html