புதன், 19 பிப்ரவரி, 2025

மும்மொழி திட்டத்தை திணிக்க காரணம் தாய்மொழியை சிதைக்கத்தான்” – திருமாவளவன் எம்.பி. கண்டனம்!

 

மும்மொழிக் கொள்கை மற்றும் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காததை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,  திருமாவளவன் எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

அப்போது விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது,

“மத்திய அரசு ஆண்டுதோறும் பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கி வந்த நிதியை தற்போது நிறுத்தி வைத்திருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையின்படி புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கிற PM Shri என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கிற பள்ளிகளை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்த வேண்டும் என நினைக்கிறது. மேலும் அதன் வாயிலாக தமிழ்நாட்டு பள்ளிக்குழந்தைகளுக்கு இந்தி மொழி கற்றுத்தர வேண்டும் என்றும் அதற்கு உடன்பட்டால் நிதியை விடுவிப்போம் என்று மத்திய கல்வி அமைச்சர் சொன்னார். அதற்கு நமது பள்ளிக் கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடன்படாமல் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சரின் அந்த பேசியதற்கு திமுக கூட்டணி கட்சிகளின்றி மற்ற கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் இன்னும் அவர்கள் பிடிவாதத்துடன் நிதியை தரமுடியாது என்று ஆணவத்துடன் சொல்கிற நிலையை பார்கிறோம். அதனால்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி இந்த ஆர்ப்பாட்டம் தொடங்கி இருக்கிறது. அன்பில் மகேஸ் மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாகும் என எச்சரித்திருந்தார். அதற்கான அறப்போராட்டம் தான் இது.

ஏற்கெனவே சர்வ சிக்ஷா அபியான் என்ற அனைவருக்குமான கல்வித் திட்டம் நடைமுறையில் இருந்தது. ஆசிரியர்களுக்கான பயிற்சி திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இது போன்ற மூன்று கல்வி திட்டங்களை இணைத்துதான் சமக்ரா சிக்ஷா என்ற கல்வித் திட்டத்தை பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள். அது ஏற்கெனவெ நடைமுறையில் இருக்கிறது. நாமும் நடைமுறைப்படுத்தி வருகிறோம். அதற்குரிய நிதி வழங்கப்பட வேண்டும்.

இப்போது அவர்கள் அறிவித்திருப்பது PM Shri என்ற பள்ளிகள். இந்த பள்ளிகளை நாம் திறந்தால், கட்டாயம் மூன்று மொழிகளை குழந்தைகள் கற்றாகவேண்டும். அதில் இந்தி கட்டாயம். அதோடு போனால் போகட்டும் என்று தாய் மொழியில் பயில இரக்கம் காட்டியுள்ளார்கள். மேலும் ஆங்கிலம் அல்லது ஏதேனும் ஒரு இந்திய மொழியை கூடுதலாக கற்றுக்கொள்ளலாம். அவர்களுடைய பார்வையின்படி இந்தி மொழி முதன்மையானது, கட்டாயமானது.

இந்த மும்மொழி திட்டத்தை அவர்கள் திணிக்க காரணம் இந்தியாவில் ஒரே மொழியை பேசுகிற நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான். ஒரே தேசம், மொழி, மதம், கலாச்சாரம், ஆட்சி, கட்சி இதுதான் அவர்களின் இறுதி இலக்கு. தமிழை அவர்கள் பிராந்திய மொழி என்கிறார்கள். இந்தியை இந்தியாவின் மொழி என்கிறார்கள்.

இது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். தமிழ் வட்டாரமொழி என்றால் இந்தியும் வட்டார மொழிதான். இந்தியை தாய் மொழியாக கொண்ட சில மாநிலங்கள்தான் வடக்கில் இருக்கிறது. இன்றைக்கு பல்வேறு மாநிலங்களின் தாய் மொழியை சிதைத்துவிட்டார்கள். அந்த நிலையை தமிழ்நாட்டில் உருவாக்க நினைக்கிறார்கள். பிற்காலத்தில் இந்தியையும்  அழித்துவிட்டு சமஸ்கிருதமே இந்தியாவின் தாய்மொழி என்று ஆக்க முயற்சிப்பார்கள்”

இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/the-reason-for-imposing-the-trilingual-plan-is-to-destroy-the-mother-tongue-thirumavalavan-condemns.html