திங்கள், 10 பிப்ரவரி, 2025

திருப்பரங்குன்றம் விவகாரம்: 'மதச்சார்பின்மை - ஒற்றுமை காப்போம்!' தி.மு.க கூட்டணி கட்சிகள் வேண்டுகோள்

 

Madurai Police Islamists protest Thiruparankundram Animal Sacrifice Hilltop Tamil News

மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, 'மதச்சார்பின்மை மற்றும் ஒற்றுமை காப்போம்' என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்,'மதச்சார்பின்மை மற்றும் ஒற்றுமை காப்போம்' என்று பொதுமக்களுக்கு மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.எம், சி.பி.ஐ, ஐ.யூ.எம்.எல், ம.நீ.ம, ம.ம.க, கொ.ம.தே.க, த.வா.க மற்றும் திராவிடர் கழகம் சார்பில் இன்று கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மத நல்லிணக்கத்திற்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டுகளில் ஒன்று தமிழ்நாடாகும்.

தமிழ்நாட்டின் ஆன்மீகத் தலங்களான பழனியாண்டவர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட இந்துமத திருத்தலங்கள், அன்னை வேளாங்கண்ணி ஆலயம், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா போன்ற அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் மத வேறுபாடு இன்றி பொதுமக்கள் வழிபடுவதே இதற்கு சான்று. இத்தகைய தமிழ்நாட்டில் மத வேறுபாடுகளை விதைத்து மக்களைப் பிரித்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கு சில அமைப்புகள் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேடுவதை பா.ஜ.க-வும் அதன் துணை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் திட்டமிட்டு செய்து வருவது வழக்கமாகி இருக்கிறது. பாபர் மசூதி, அஜ்மீர் தர்கா என வரிசையாக இத்தகைய பிளவுவாத அரசியலைச் செய்து வருகின்றனர். அவர்களின் அடுத்த குறி தமிழ்நாடாக இருக்கிறது.

தமிழ்நாட்டிலும் கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சிறு சிறு வலதுசாரி அமைப்புகள் பா.ஜ.க-வின் ஆதரவில் முளைவிட்டு வளரத் தொடங்கியிருந்தன. கடந்த மூன்றாண்டுகளாக அடங்கியிருந்தவர்கள் தேர்தலை கவனத்தில் கொண்டு தங்களின் பிளவுவாத அரசியலை தொடங்கியிருக்கின்றனர். பாரதிய ஜனதாவின் தேர்தல் அறுவடைக்காக தமிழ்நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்திட திட்டமிட்டு சதிகளை அரங்கேற்றி வருகின்றன.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி தற்போது தனது அடுத்தகட்ட மதவெறித் திட்டத்தை பா.ஜ.க-வும், அதன் சங்பரிவார அமைப்புகளும் அரங்கேற்றியுள்ளன. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கிறது. திருப்பரங்குன்றம் மலைஅடிவாரத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும், மலையின் தென்புறம் காசி விஸ்வநாதர் கோயிலும், கீழ்புறம் உச்சிப்பிள்ளையார் கோயிலும் அமைந்துள்ளன.

2000 ஆண்டுகளுக்கு முன்பாக சமணம் இருந்திருக்கிறது. திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா அமைந்துள்ளது. இங்கு நீண்ட காலமாக மக்கள் எவ்வித பிரச்னையுமின்றி வழிபாடு செய்து வருகின்றனர்.

நேர்மையும், அறவுணர்வும் கொண்ட நமது முன்னோர்கள் காலத்தில் இருந்தே அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பூசைகளும், சிக்கந்தர் தர்காவில் அவ்வப்போது நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடு, கோழிகளை காணிக்கையாக செலுத்தி அன்னதானம் (கந்தூரி) செய்வதும் வழக்கமாக இருந்துள்ளது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் தர்காவிற்கு சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனர்.

மேற்கண்ட வழிபாட்டு முறைகள் குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் பதற்றத்தை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா அமைப்புகள் ஏற்படுத்தி வருகின்றன. திருப்பரங்குன்றத்தில் இருக்கிற சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொய் செய்திகளைப் பரப்பி பிப்ரவரி 4-ம் தேதி திருப்பரங்குன்றத்தில் கூடுமாறு அழைப்பு விடுத்தது. சமூக வலைதளங்களில் மதவெறிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டது.

இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து பதற்றத்தை உருவாக்க முனைந்துள்ள மதவெறி சக்திகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர். மாவட்ட நிர்வாகமும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டன.

அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்கள் இவ்வமைப்புகளின் பொய்யையும், புரட்டையும் நம்பவில்லை; முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர். எனினும், அங்கு கூடிய மதவெறி அமைப்பினர் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும் வெறியூட்டக்கூடிய விதத்திலும் பேசி தங்களது பிளவுவாதத் திட்டத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

மேலும், தமிழ்நாட்டின் பொது அமைதியையும், ஒற்றுமையையும் உயர்த்திப்பிடித்த திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மதுரை மக்களுக்கும், மதச்சார்பற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மிகப்பழமையான நகரமான மதுரை எப்போதும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மதுரை மக்கள் அனைத்து மத நம்பிக்கைகளை மதித்தும், அனைத்து மத விழாக்களிலும் பங்கேற்று வருகின்றனர்.

மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து மக்கள் ஒற்றுமையையும், அனைத்து பகுதி மக்களின் வழிபாட்டு உரிமையையும் பாதுகாக்க திருப்பரங்குன்றத்தின் அனைத்துப் பகுதி மக்களும் இப்போதுபோல் எப்போதும் உறுதிகாட்ட வேண்டும் எனவும், தமிழ்நாடு இத்தகைய மதவெறி அமைப்புகளை முழுமையாக புறக்கணித்திட வேண்டும் எனவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் மதச்சார்பின்மை மற்றும் மக்கள் ஒற்றுமை காப்பதில் உறுதியுடன் செயல்பட்டு அனைத்து மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம்” என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-alliance-parties-leaders-joint-statement-communal-harmony-and-integrity-thiruparankundram-issues-8705759

Related Posts: