செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

ஜாக்டோ- ஜியோ போராட்டம் நடத்த தடை: மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

 

24 2 25 


madras High Court of Madurai Bench order Jacto Geo not to protest tomorrow

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் சாலை மறியல் போராட்டத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில், போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “திருச்சியில் பிப்.4-ல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ மாநில அளவிலான கூட்டத்தில் கோரிக்கைகைளை வலியுறுத்தி அனைத்து தாலுகா தலைநகரங்களிலும் நாளை (பிப்.25) வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் சட்டவிரோதம் என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் உத்தரவிட்டதுடன், வேலை நிறுத்தப் போராட்டங்களுக்கு தடையும் விதித்துள்ளது.

அதன் அடிப்படையில் ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ள வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் சட்ட விரோதமானது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும் அது அரசு ஊழியர்களுக்கும், அரசுக்கும் இடையிலான பிரச்சினை. சாலை மறியல் நடத்தினால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மருத்துவமனைகளுக்கு செல்வோர் என வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படும். சாலை மறியலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கும் போது அவர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும். இதனால் அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்படும்.

எனவே, பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஜாக்டோ - ஜியோ அமைப்பின் நாளை வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டங்களுக்கு தடை விதித்தும், போராட்டத்தில் ஈடுபடும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யவும், தற்காலிக பணி நீக்கம் செய்து விசாரணை நடத்தி நிரந்தர பணி நீக்கம் செய்யவும் உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  நீதிபதிகள் ஒரு நாள் அடையாள போராட்டம் தானே, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வளாகத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால் என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அரசு தரப்பில், அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், பேச்சுவார்த்தை முடியும் வரை எவ்விதமான போராட்டங்களையும் நடத்தக் கூடாது. மனு தொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும். விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/madras-high-court-of-madurai-bench-order-jacto-geo-not-to-protest-tomorrow-8752309