சீமானை மைக் புலிகேசி என டி.ஐ.ஜி வருண் குமார் விமர்சித்திருந்த நிலையில், வருண் குமார் தனக்கு வெறி ஏற்றும் விதமாக பேசி வருவதாக சீமானும் குற்றம்சாட்டியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் டி.ஐ.ஜி வருண் குமார் ஆகியோர் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும், சீமான் மீது அவதூறு வழக்குகளையும் வருண் குமார் தாக்கல் செய்துள்ளார். இந்த சூழலில் இருவர் இடையே வார்த்தைப் போர் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, "திண்டுக்கல் டி.ஐ.ஜி-யாக என் மனைவி பதவி வகித்து வருகிறார். எங்களுக்குள் விவாகரத்து என்று அவதூறு பரப்பும் விதமாக கூறுகின்றனர். சீமான் ஒரு மை புலிகேசி; அவரது தரம் அவ்வளவு தான்" என வருண் குமார் கூறியிருந்தார்.
இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக சீமானும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். "ஒரு போலீஸ் அதிகாரி, அவருக்குரிய வேலையை மட்டுமே பார்க்க வேண்டும். அதை விடுத்து கட்சிக்காரரை போல் மீண்டும், மீண்டும் என்னையே சீண்டிக் கொண்டிருக்கிறார். இப்படி செய்தால் எனக்கு வெறி தான் வரும்.
தமிழகத்தில் எத்தனையோ காவல்துறை அதிகாரிகள், ஐ.பி.எஸ் ஆபிசர்கள் இருக்கின்றனர். ஆனால், வருண் குமார் மட்டும் இதே வேலை செய்து வருகிறார். ஆனால், இது குறித்து வருண் குமாரிடம் யாரும் கேள்வி எழுப்புவதில்லை. என்னிடம் மட்டுமே கேள்வி கேட்கின்றனர்.
அவர் மீது காவல்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இது குறித்து கேட்க வேண்டும். ஆனால், வருண் குமார் இவ்வாறு பேசுவதற்கு அவர்களே தூண்டி விடுகின்றனர்.
இதற்காக தான் அவருக்கு பதவி உயர்வு கொடுத்து, அதே இடத்தில் பணியாற்ற அனுமதிக்கின்றனர். அவரே ஒரு அரசாங்கம் போன்று செயல்படுகிறார். என் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களது செல்போனை பறிக்கின்றார்.
வருண் குமாரின் வேலையை செல்போன் திருடுவது தான். அதன் பின்னர், செல்போனில் இருக்கும் குரல் பதிவுகளையும் வருண் குமார் திருடுகிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்கள் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட போது எல்லோரும் கோபம் கொண்டனர்.
இதுவரை நாம் தமிழர் கட்சியினரின் 14 செல்போன்களை வருண் குமார் பறித்துக் கொண்டார். அதற்காகவும் பத்திரிகையாளர்கள் நியாயமாக கோபப்பட்டிருந்தால், இதற்கெல்லாம் தீர்வு கிடைத்திருக்கும். தங்களுக்கு பாதிப்பு என்றால் மட்டும் பத்திரிகையாளர்கள் கோபப்படுகின்றனர்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/seeman-slams-dig-varun-kumar-on-his-speech-8737281