/indian-express-tamil/media/media_files/2025/02/11/fCm2E1PIEn5196rQnk8j.jpg)
குரூப் தேர்வில் கேட்க்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை
தமிழ்நாட்டில் எந்தத் திட்டத்தை அறிமுகம் செய்ததால் முதல்வரை மக்கள் தாயுமானவர் என அழைக்கின்றனர்? என்று டிஎன்பிஎஸ்சி வினாத்தாளில் கேட்க்கப்பட்டு இருந்த கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.
குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்றன. மாநிலம் முழுவதும் குரூப் 2 தேர்வு மூலம் சுமார் 61 வகையான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள 2,327 பணியிடங்கள் குரூப் 2, 2ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
முதன்மைத் தேர்வு பிப்.8ஆம் தேதி நடந்தது. இரண்டாம் தாளில் பொது அறிவு மற்றும் பொதுத் திறனறிவு கேள்விகளும் முதல் தாளில் தமிழ் மொழி தகுதித் தேர்வு நடைபெற்றது. சுமார் 2 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தேர்வில் 82 தேர்வு மையங்களில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ’தமிழ்நாட்டில் எந்தத் திட்டத்தை அறிமுகம் செய்ததால் முதல்வரை மக்கள் தாயுமானவர் என அழைக்கின்றனர்?’ என்று 88ஆவதாக ஒரு கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதற்கான விடைகளாக, பள்ளியில் காலை உணவு, விடியல் பயணத் திட்டம், நீங்கள் நலமா? மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட பதில்கள் கொடுக்கப்பட்டு இருந்தன.
இந்த கேள்வி தற்போது இணையத்தில் பரவி வரும் நிலையில் இதற்கு நெட்டிசன்களும் பாஜகவினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பலரும் எக்ஸ் பதிவில் பதிவிட்டு வருகின்றனர்.
’’TNPSC குரூப் 2A தேர்வில் தமிழ்நாட்டில் முதல்வரை தாயுமானவர் என்று அழைக்கக் காரணமான திட்டம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது. TNPSC தேர்வுகள் என்பது தேர்வு எழுதுபவர்களின் அடிப்படைத் திறன்களைக் கண்டறியவா அல்லது திராவிட மாடலை விளம்பரப்படுத்தவா என்பது மிகப்பெரும் சந்தேகம்.
இது போன்ற கேள்விகளால் முதல்வரை திருப்திப்படுத்த வேண்டுமென்று தேர்வு ஆணையம் நினைக்கிறதா? அல்லது இது போன்ற கேள்விகளை அரசே கட்டாயமாக்கி இருக்கிறதா? இனி வரும் தேர்வுகளில் முதல்வர் அல்வா சாப்பிட்ட கடையின் பெயர் என்ன என்பது கேள்வியாக்கப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை.
இது போன்ற கேலிக் கூத்து விளம்பரங்களால் நிர்வாக சீர்கேடுகள் மறைந்து விடுவதில்லை என்பதை அறிவால் உணர்ந்து கொண்டு சிறுபிள்ளைத்தனமான முயற்சிகளைக் கைவிட்டு தமிழ்நாட்டுப் பிரச்சனைகளில் கவனம் செலுத்த அரசு முயலுமா என்பது சந்தேகமே!’’ என்று பதிவிடப்பட்டுள்ளது.
இதுபோன்று பலரும் இது எல்லாம் ஒரு கேள்வியா? என்று பலவிதமாக பலரும் பதிவிட்டுள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tnpsc-controversial-question-8709197