ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

NEET 2025 OBC NCL Certificate: ரூ 8 லட்சத்திற்கும் மேல் வருமானம் இருந்தால் ஓ.பி.சி என்.சி.எல் சான்றிதழ் கிடைக்குமா? அரசாணை கூறுவது என்ன?

 

neet syllabus

நீட் தேர்வுக்கு பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வரும் நிலையில், ஓ.பி.சி சான்றிதழ் குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருந்து வருகின்றன. ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு மேல் இருந்தால் ஓ.பி.சி சான்றிதழ் கிடைக்குமா என்பது தான் பலரின் கேள்வி. ஆனால் அரசு ஓ.பி.சி சான்றிதழ் வழங்க சில நிபந்தனைகளை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையிலே சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு அதிகமாக பெறும் குடும்பத்தினரும் ஓ.பி.சி சான்றிதழ் பெறலாம். அது எப்படி? யாருக்கு ஓ.பி.சி சான்றிதழ் கிடைக்காது என்பதை இப்போது பார்ப்போம். 

எவர்கிரீன் கைடன்ஸ் டாக்டர் அனந்தமூர்த்தி யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவின்படி, ஓ.பி.சி நான் – கிரீமிலேயர் சான்றிதழ் பெற ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எந்த வகையிலான வருமானம் இந்த சான்றிதழ் வழங்க கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதை தெரிந்துக் கொள்வது முக்கியம்.

வருமானத்தைப் பொறுத்தவரை, சம்பளம், விவசாய வருமானம், இதர வருமானம் என பல வகைகளில் உள்ளன. இவற்றில் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் ஓ.பி.சி சான்றிதழுக்கான அளவுகோல்களாக இருக்காது. எனவே சம்பளம் மற்றும் விவசாய வருமானம் 8 லட்சத்திற்கு அதிகமாக இருந்தாலும், ஓ.பி.சி சான்றிதழ் வழங்கப்படும். அதேநேரம், இதர வருமானம் 8 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் ஓ.பி.சி சான்றிதழ் வழங்கப்படாது. 

சம்பளம் மற்றும் இதர வருமானம் அல்லது விவசாய வருமானம் மற்றும் இதர வருமானம் 8 லட்சத்திற்கு அதிகமாக இருந்தாலும், இதர வருமானம் 8 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் ஓ.பி.சி சான்றிதழ் வழங்கப்படும். எந்த வகையிலும் இதர வருமானம் 8 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் ஓ.பி.சி சான்றிதழ் வழங்கப்படாது. தமிழக அரசின் அரசாணையின்படி இந்த அளவுகோல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


source https://tamil.indianexpress.com/education-jobs/neet-ug-2025-obc-ncl-certificate-details-in-tamil-8724196