ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

பிளாக்மெயில் செய்யும் மத்திய அரசு; தடித்தனத்தை தமிழர்கள் பொறுக்க மாட்டார்கள்": ஸ்டாலின் கடும் விமர்சனம்

 

CM Stalin slams

தமிழ்நாட்டை மத்திய அரசு பிளாக்மெயில் செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார்.

முன்னதாக, மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார்.

அதன்படி, உத்தர பிரதேச மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால்தான் கல்வி நிதி விடுவிக்கப்படும். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காத பட்சத்தில் ரூ. 2 ஆயிரம் கோடியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது" எனத் தெரிவித்தார்.

மத்திய கல்வி அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் இருந்து பலரும் எதிர்ப்பு கூறியிருந்தனர். குறிப்பாக, தர்மேந்திர பிரதானின் இத்தகைய பேச்சு மீண்டும் மொழிப்போரை ஏற்படுத்துவது போன்று அமைகிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், "They have to come to the terms of the Indian Constitution என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?

மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!  

'மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது' என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!

எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்..." எனப் பதிவிட்டுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-stalin-slams-central-education-minister-dharmendra-pradhan-8725223

Related Posts: