/indian-express-tamil/media/media_files/2026/01/26/donald-trump-1-2026-01-26-21-35-02.jpg)
'இந்திய - அமெரிக்க உறவு வரலாற்று பிணைப்பு'... குடியரசு தினத்தை முன்னிட்டு இருநாட்டு உறவு குறித்து டிரம்ப் வாழ்த்து
இந்தியாவின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். உலகின் பழமையான மற்றும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான உறவை வரலாற்றுப் பிணைப்பு என்று அவர் வர்ணித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் இணைந்து இருக்கும் பிளாக் & வொயிட் புகைப்படத்தை பகிர்ந்து டிரம்பின் செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்க மக்களின் சார்பாக, இந்தியாவின் 77-வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் பழமையான மற்றும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக அமெரிக்காவும் இந்தியாவும் வரலாற்றுப் பிணைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார். பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உண்மையான முடிவுகளை வழங்கி வருவதாக அவர் பாராட்டியுள்ளார். இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோகோர், முதல்முறையாக குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதை பெருமையாகக் கருதுவதாகத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய வான்வெளியில் பறந்த அமெரிக்கத் தயாரிப்பு விமானங்கள், இரு நாடுகளுக்கு இடையிலான வளர்ந்து வரும் மூலோபாயக் கூட்டாண்மையின் (Strategic Partnership) வலிமையான சின்னமாகும். இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உணர்வைக் கொண்டாடும் இந்த நிகழ்வில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
2026-ம் ஆண்டு இந்தியாவின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவின் உயர் மட்டத் தலைவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்து உடன் இந்தியாவின் ஜனநாயக வலிமையைப் பாராட்டியுள்ளது, உலக அரங்கில் இந்தியா-அமெரிக்கா இடையிலான நெருக்கமான உறவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/international/donald-trump-hails-historic-bond-between-india-us-in-r-day-greeting-trump-celebrates-historic-india-us-partnership-11032356





