சனி, 24 ஜனவரி, 2026

நோ ரீஃபண்ட்: 2026 முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள்

 

Vande Bharat Sleeper Fare Vande Bharat Sleeper Ticket Price Premium Train Tickets India No RAC Vande Bharat

Revised Rules for Indian Railways: இந்திய ரயில்வேயின் 2026-ஆம் ஆண்டிற்கான புதிய கொள்கை விளக்கத்தின்படி, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் அமிர்த பாரத் II (Amrit Bharat II) ஆகிய பிரீமியம் ரயில்களுக்கான டிக்கெட் ரத்து மற்றும் கட்டணத்தைத் திரும்பப் பெறுதல் (Refund) விதிகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகளின்படி, உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது பயணிகள் அதிக தொகையை இழக்க நேரிடும்.

முன்பு சாதாரண ரயில்களில் ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரம் முன்பு வரை டிக்கெட்டை ரத்து செய்து ஓரளவிற்கு பணத்தைத் திரும்பப் பெற முடிந்தது. ஆனால், இந்த புதிய சொகுசு ரயில்களில் ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே இறுதிப் பட்டியல் (Chart Preparation) தயார் செய்யப்படுவதால், அந்த நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்யாவிட்டால் ஒரு ரூபாய் கூட திரும்பக் கிடைக்காது. அதாவது, 8 மணி நேரத்திற்கும் குறைவான கால இடைவெளியில் டிக்கெட்டை ரத்து செய்பவர்களுக்கு 'ஜீரோ ரீஃபண்ட்' (Zero Refund) முறையே அமலில் இருக்கும்.

முன்கூட்டியே ரத்து செய்பவர்களுக்கும் அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாகவே டிக்கெட்டை ரத்து செய்தாலும், மொத்த கட்டணத்தில் 25 சதவீதம் ரத்து கட்டணமாகப் பிடித்தம் செய்யப்படும். இதுவே ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கும் 8 மணி நேரத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ரத்து செய்தால், கட்டணத்தில் 50 சதவீதம் வரை அபராதமாக வசூலிக்கப்படும். சாதாரண ரயில்களில் விதிக்கப்படும் நிலையான ரத்து கட்டண முறையை விட இது மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கடுமையான மாற்றங்களுக்குப் பின்னால் முக்கியமான காரணங்களை ரயில்வே அதிகாரிகள் முன்வைக்கின்றனர். வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் அமிர்த பாரத் II ஆகிய ரயில்களில் 100 சதவீத உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதில் ஆர்.ஏ.சி (Reservation Against Cancellation) அல்லது காத்திருப்புப் பட்டியல் (Waiting List) போன்ற நடைமுறைகள் கிடையாது. இதனால் கடைசி நேரத்தில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் அந்த இருக்கைகள் காலியாகவே செல்லும் சூழல் உருவாகிறது. இது ரயில்வேக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு, மற்ற பயணிகளுக்கான வாய்ப்பையும் பறிக்கிறது. எனவே, இருக்கை பயன்பாட்டை முறைப்படுத்தவே இந்த கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 2026 ஜனவரி முதல் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து புதிய அமிர்த பாரத் ரயில்களும் 'அமிர்த பாரத் II' என வகைப்படுத்தப்படும் என்றும், ஜனவரி 15, 2025 அன்று வெளியான சுற்றறிக்கையின்படி இந்த புதிய விதிகள் அவற்றுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த புதிய ரயில்களில் பயணம் செய்யத் திட்டமிடும் பயணிகள், தங்களின் பயணத் திட்டம் உறுதியாக இருந்தால் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


source https://tamil.indianexpress.com/india/new-strict-rules-for-vande-bharat-sleeper-amrit-bharat-ii-11024893