வியாழன், 22 ஜனவரி, 2026

டாவோஸ் மாநாட்டில் உலக நாடு

 

Donald Trump

கிரீன்லாந்து முதல் உக்ரைன் வரை... டாவோஸ் மாநாட்டில் உலக நாடுகளை அதிரவைத்த டிரம்பின் பேச்சு

உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் புதன்கிழமை உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐரோப்பிய நாடுகள் தவறான திசையில் செல்வதாக கடுமையாக விமர்சித்தார். மேலும் உக்ரைன் போர், கிரீன்லாந்து விவகாரம் மற்றும் கனடாவுடனான உறவு குறித்து பல்வேறு அதிரடி கருத்துக்களை அவர் முன்வைத்தார்.

ஐரோப்பா மீது தமக்கு அன்பு இருப்பதாகக் குறிப்பிட்ட டிரம்ப், ஆனால் அந்த கண்டம் தற்போது தன்னைத்தானே அழித்துக் கொண்டு வருவதாக கூறினார். காற்றாலைகள், குடியேற்றம் மற்றும் வர்த்தகம் ஆகிய விஷயங்களில் ஐரோப்பிய தலைவர்களின் முன்னிலையிலேயே அவர்களைச் சாடினார். ஐரோப்பாவின் சில பகுதிகளை இப்போது அடையாளம் காணவே முடியவில்லை. அமெரிக்கா மீது திணிக்கப்பட முயன்ற அதே தீவிர இடதுசாரிப் போக்குகளை இங்கும் காண முடிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியைப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட டிரம்ப், அமெரிக்காதான் இந்த கிரகத்தின் பொருளாதார இயந்திரம் என்றார். தான் பதவியேற்றபோது இருந்த மிகப்பெரிய பணவீக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டதாகக் கூறிய அவர், தனது வரிக் கொள்கைகளே இந்த வெற்றிக்குக் காரணம் என்றார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். 2-ம் உலகப் போரின்போது ஜெர்மனியிடம் ஆறே மணி நேரத்தில் சரணடைந்த டென்மார்க்கால் கிரீன்லாந்தை பாதுகாக்க முடியாது என்றும், அப்போது அமெரிக்காவே அதைப் பாதுகாத்ததாகவும் கூறினார். நாங்க அதைக் காப்பாற்றித் திரும்பக் கொடுத்தோம், ஆனால் அவர்கள் இப்போது எவ்வளவு நன்றி உணர்வற்றவர்களாக இருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

கிரீன்லாந்தைக் கைப்பற்ற ராணுவ பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என்று கூறிய டிரம்ப், அதே சமயம் நீங்க சம்மதித்தால் நாங்க பாராட்டுவோம், மறுத்தால் அதை நினைவில் வைத்திருப்போம் என்று எச்சரிக்கை விடுத்தார். கனடா எங்களிடமிருந்து பல சலுகைகளை இலவசமாக பெறுகிறது. அமெரிக்கா இருப்பதால்தான் கனடாவே உயிர் வாழ்கிறது என்று டிரம்ப் விமர்சித்தார்.

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடக்காமல் இருந்திருந்தால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியிருக்கவே செய்யாது என்று டிரம்ப் வாதிட்டார். புதன்கிழமை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியைச் சந்திக்கவிருப்பதாகவும், போரை முடிக்க இரு நாடுகளும் விரும்புவதாகவும் தெரிவித்தார். அமெரிக்காவுக்கு ஒரு தேவை என்றால் நேட்டோ நாடுகள் துணை நிற்குமா என்பதில் தமக்குச் சந்தேகம் இருப்பதாகக் கூறினார்.

வெனிசுலாவில் நிலைமை சீராகி வருவதாகவும், முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட முன்வருவதாகவும் தெரிவித்தார். ரோலக்ஸ் போன்ற சுவிஸ் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று சுவிட்சர்லாந்து இறக்குமதிப் பொருட்களுக்கான வரியைக் குறைத்துள்ளதாகவும், ஆனால் இது நிரந்தரமல்ல என்றும் குறிப்பிட்டார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேற்று மாநாட்டில் கூலிங் கிளாஸ் (Sunglasses) அணிந்திருந்ததை டிரம்ப் வேடிக்கையாகக் கிண்டல் செய்தார்.


source https://tamil.indianexpress.com/international/top-quotes-from-donald-trumps-speech-at-world-economic-forum-11019761