திங்கள், 26 ஜனவரி, 2026

மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க கூட்டம்

25 1 2026 


stalin sudalai

'இந்தியை திணிக்க துடியாய் துடிக்கும் கும்பல்'... மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி, பா.ஜ.க.வின் அரசியல் போக்கு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

உரையை தொடங்கிய ஸ்டாலின், தமிழ்நாட்டிற்குப் பெயர் சூட்டிய அறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் இருந்து பேசுவது பெருமை அளிக்கிறது. மொழிப்போர் தியாகிகளின் மூச்சுக்காற்றுதான் இன்றும் தமிழர்களை இயக்கிக்கொண்டிருக்கிறது. அவர்களின் நினைவாகத் தமிழக அரசு மணிமண்டபங்களை அமைத்து கௌரவித்துள்ளது. எனது அரசியல் பயணத்தின் உந்துசக்தியே அண்ணாதான் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசிய அவர், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்க ஒரு கும்பல் துடிக்கிறது. பணத்தையும் அதிகாரத்தையும் காட்டிப் பணிய வைக்க நினைக்கிறார்கள். நாம் என்ன அடிமைகளா? அண்ணா மற்றும் கலைஞரின் பரம்பரையில் வந்த தமிழ் பிள்ளைகள் நாம். 1938 முதல் இந்தி திணிப்பை எதிர்த்து வருகிறோம். இது வெறும் மொழித் திணிப்பல்ல, ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு என முழங்கினார்.

தேர்தல் அரசியல் குறித்துப் பேசுகையில் பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்தார். தேர்தல் வந்தாலே பிரதமர் மோடியின் வடைகள் வந்து விடும். ஆனால், இம்முறை அந்த வடை மாவு புளித்துவிட்டது. டபுள் என்ஜின் எனக் கூறி வடமாநில மக்களை ஏமாற்றியது போல் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேச பிரதமருக்குத் தகுதி இல்லை. மகாராஷ்டிராவில் பேச வேண்டியதை மதுராந்தகத்தில் பேசுவது நியாயமா? குஜராத்தில் பில்கிஸ் பானுவை வன்கொடுமை செய்தவர்களை விடுதலை செய்ததும், மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்டதும் பா.ஜ.க. ஆட்சியில்தான் நடந்தது. இந்தியாவிலேயே அதிக மாணவிகள் கல்லூரிக்குச் செல்வதும், அதிக பெண்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிவதும் தமிழ்நாட்டில்தான். பெண்களுக்காக அதிகத் திட்டங்களைச் செயல்படுத்தியது திராவிட மாடல் அரசுதான் என்றார்.

அ.தி.மு.க.வின் தோளில் சவாரி செய்து தமிழகத்திற்குள் நுழைய பா.ஜ.க நினைக்கிறது. எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் டெல்லி ஆதிக்கத்திற்குத் தமிழ்நாடு தலைகுனியாது. 'குஜராத் மோடியா? இந்த லேடியா?' என ஜெயலலிதா கேட்டதை மோடி மறந்திருக்கலாம், ஆனால் தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள். தமிழகத்தில் பாஜகவால் ஒருபோதும் வெல்ல முடியாது என உறுதிபடத் தெரிவித்தார். 



source https://tamil.indianexpress.com/tamilnadu/let-tamil-live-even-if-we-fall-cm-mk-stalins-stirring-speech-at-kanchipuram-cm-mk-stalin-pays-tribute-on-veeravanakkam-day-11029890