2006 தேர்தலில் 8%... 2021-ல் 1% வாக்குகள்; தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க கடந்து வந்த பாதை 22 1 2026
எம்.ஜி.ஆரைப் போலவே அவரும் கட்சி தொடங்க பல காரணங்கள் இருந்தன. அதில் முதன்மையானதாக சொல்லப்பட்டது, விஜயகாந்த் - ராமதாஸ் இடையே நிலவிய மோதல். கள்ளக்குறிச்சியில் தனது ரசிகர் இல்ல திருமண விழாவில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸை கடுமையாக விமர்சித்ததன் விளைவாக, முதலில் விஜயகாந்த் - ராமதாஸ் மோதலாக வெடித்து, பிறகு விஜயகாந்த் ரசிகர் மன்றம் - பா.ம.க மோதலாக விரிவடைந்தது. தங்கள் தலைவரை விமர்சித்த விஜயகாந்த்துக்கு பாடம் புகட்ட அவரின் ரசிகர் மன்ற கொடிக் கம்பங்களை வெட்டி சாய்த்தனர் பா.ம.க-வினர். இந்த பிரச்சனையின் போது நேரடியாக களத்திற்கு 'இப்போது கம்பங்களை தொட்டுப் பாருங்கள்' என்கிற தொனியில் அதிர விட்டார் விஜயகாந்த். அந்த கணமே தனது அரசியல் பிரவேசத்தையும் அறிவித்தார்.
ஏற்கனவே தனது படங்கள் மூலம் அரசியலில் ஈடுபட போவதை வெளிப்படுத்திக் காத்திருந்த விஜயகாந்துக்கு இந்த சம்பவம் கட்சி தொடங்கிட தீப் பொறியாக அமைந்தது. "அரசியலுக்கு வந்துதான் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால், அந்த அரசியலை நேராக செய்துதான் எனக்குப் பழக்கமே தவிர, இதோ வருவேன், வரமாட்டேன், நேரம் வரும்போது சொல்வேன் என இப்படி பேசும் ஆள் நான் இல்லை. நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்" என்று அவர் 2001-ல் வெளியான நரசிம்மா படத்தில் பேசி இருந்தார். மறைந்த முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரை, தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வந்த ரஜினி - கமல் அரசியலுக்கு வராமல் இருந்தனர்.
அப்படியான கலாக் கட்டத்தில், தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு மாற்று தான்தான் என கம்பீரமாக அறிவித்து புதிய அரசியலை முன்னெடுத்தார் விஜயகாந்த். 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை (தே.மு.தி.க) தோற்றுவித்த அவர், மதுரை மண் அதுவரை கண்டிராத கூட்டத்தை கூட்டி தனது அரசியல் வருகையை இடி முழக்கமாக அறிவித்தார். அவருக்கு கூடிய கூட்டத்தைக் கண்டு பிரதான கட்சிகள் அனைத்தும் பிரம்மித்துப் போயின. அந்த நேரத்தில், ஆட்சியில் இருந்த தி.மு.க நெடுஞ்சாலை பணிக்காக விஜயகாந்த்தின் ஆண்டாள் - அழகர் திருமண மண்டபத்தை இடிக்கவே, அரசியல் காழ்புணர்ச்சிக்காகவே அப்படி செய்கிறார்கள் என்று தனது தொண்டர் படையை அமைதிப் படுத்தினார்.
2006 சட்டமன்ற தேர்தல்
விஜயகாந்த்தின் அரசியல் வருகை தமிழகத்தின் பிரதான கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைக்க, அவரின் அரசியல் பலத்தை சோதிக்க 2006 சட்டமன்ற தேர்தல் வந்தது. தே.மு.தி.க-வை தொடங்கி 8 மாதங்களே ஆன நிலையில், தேர்தலை சந்திக்கவிருந்த அவர் தனது கட்சியை தமிழகம் முழுவதும் பரப்பிட சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அவரின் கால்கள் படாத இடமே இல்லை என சொல்லும் அளவுக்கு இரவு பகலாக பிரச்சாரம் செய்தார். அந்தத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், 'தே.மு.தி.க-வின் கூட்டணி கடவுளுடனும் மக்களுடனும் தான்' என அறிவித்தார்.
234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க, இத்தேர்தல் முடிவில் 8.45 சதவீத வாக்குகளை பெற்றது. பா.ம.க-வின் கோட்டையாக கருதப்பட்ட விருத்தாசலத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் விஜயகாந்த். தே.மு.தி.க தரப்பில் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்று இருந்தாலும் 128 தொகுதிகளில் வெற்றி தோல்விகளை தீர்மானித்து இருந்தது. அதேபோல், 27 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றும் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது தே.மு.தி.க.
தொடர்ந்து நடந்த 2009 மக்களவை தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க, பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்து, எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மொத்தமாக 31 லட்சத்து 26 ஆயிரத்து 117 வாக்குகளை பெற்றது தே.மு.தி.க. இது பதிவான மொத்த வாக்குகளில் 10.9 சதவீதம் ஆகும். அக்கட்சியின் சார்பில் 39 தொகுதிகளிலும் போட்டியிட்ட வேட்டபாளர்கள் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குகளை பெற்று இருந்தனர்.
2011 சட்டமன்ற தேர்தல்
சினிமாவில் எப்படி குறுகிய காலத்தில் உச்சம் தொட்டாரோ, அதேபோல் அரசியலிலும் குறுகிய காலத்திலேயே உச்சத்தை நோக்கி நகர ஆரம்பித்தார் விஜயகாந்த். 2011 சட்டமன்ற தேர்தல் சூடி பிடிக்க தே.மு.தி.க-வை தங்கள் வசம் இழுக்க தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் போட்டியிட்டன. இறுதியில் பல கட்ட பேச்சு வார்த்தைக்குப் பின் அ.தி.மு.க-வுடன் கைகோர்த்தார் விஜயகாந்த். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பிடித்த தே.மு.தி.க-வுக்கு 41 இடங்களை ஒதுக்கி இருந்தார் ஜெயலலிதா, அதில் 29 தொகுதிகளை வென்றது தே.மு.தி.க. ஆனால், முந்தைய தேர்தலில் பெற்ற வாக்குகளை விட சற்று குறைந்து 7.88 சதவீத வாக்குகளை பெற்றது. 150 தொகுதிகளை கைப்பற்றிய அ.தி.மு.க ஆட்சி அமைக்க, 20 இடங்களை மட்டும் வென்ற தி.மு.க மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. அதனால், விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற்றார்.
முதல் தேர்தலில் எம்.எல்.ஏ-வாக சட்டமன்றத்திற்குள் நுழைந்த விஜயகாந்த், இப்போது எதிர்க் கட்சித் தலைவராக உயர்ந்து இருந்தார். கூட்டணியில் உள்ள ஆளும் அ.தி.மு.க-வுடன் நட்பு பாராட்டி மக்களுக்கு வேண்டியதை கேட்டுப் பெற்று கட்சியை வளர்ப்பார் விஜயகாந்த் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிந்த சில மாதங்களிலே அ.தி.மு.க-வும் தே.மு.தி.க-வும் பகைமை பாராட்டத் தொடங்கின. பேருந்து கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு போன்ற சாமானிய மக்களை பாதிக்கும் ஆளும் அ.தி.மு.க அரசின் முடிவுகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் முழக்கமிட்டார் விஜயகாந்த். மேலும் பொதுவெளியில் கடுமையாகவும் விமர்சித்தார். இது தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய விஜயகாந்த்துக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி கையை உயர்த்தி விஜயகாந்த் பேசவே, இரு கட்சிக்கும் இடையே எதிர்ப்புணர்வு ஏற்பட்டது.
இதன் எதிரொலியாக சொந்த கட்சியில் இருந்தவர்கள் ஆளும் அ.தி.மு.க-வுக்கு ஆதவராக சென்றனர். இதனால், தே.மு.தி.க-வில் அதிருப்தி எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்தது. தே.மு.தி.க அவைத் தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தே.மு.தி.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தார். இதனால் சட்டமன்றத்தில் வெறும் 20 எம்.எல்.ஏ-களின் ஆதரவை கொண்டிருந்த விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்தார். இந்த இக்கட்டான சூழலில், 2014 மக்களவை தேர்தல் வந்தது. அப்போது தே.மு.தி.க-வை தங்கள் கூட்டணியில் இணைக்க மத்திய, மாநில கட்சிகள் போட்டி போட்டன. தி.மு.க தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க-வில் தி.மு.க இருக்கிறது எனக்கூறி வெளிப்படையாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால், எந்த மாநில கட்சியுடனும் கூட்டணிக்கு செல்லாத தே.மு.தி.க, பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றது. இந்தத் தேர்தலில் தான் நாடு முழுதும் மோடி அலை வீசியது. அதற்கு சாவல் விடுத்து தமிழகத்தில் லேடி அலையை பரப்பினார் ஜெயலலிதா. மோடி vs லேடி என இங்கு தேர்தல் களம் சூடு பிடித்திருந்தது. 'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை' என்ற கூற்றுக்கு இணங்க, எந்த பா.ம.க-வுக்கு எதிராக தேர்தல் அரசியலில் இறங்கினாரோ அதே கட்சி இடம் பெற்ற கூட்டணியில் இணைந்தார் விஜயகாந்த். இத்தேர்தலில் தே.மு.தி.க 14 இடங்களில் போட்டியிட்ட நிலையில், அதில் ஒன்றில் கூட வெல்லவில்லை. இதனால், தே.மு.தி.க-வின் வாக்கு சதவீதம் 5.1 ஆக சரிந்தது.
2016 சட்டமன்ற தேர்தல்
தொடர்ந்து நடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் களம் கண்ட தே.மு.தி.க-வுக்கு, தி.மு.க தங்கள் கூட்டணியில் இணைய பகிரங்கமாக அழைப்பு விடுத்தும் அதனை தவிர்த்து இருந்தார் விஜயகாந்த். அப்போது மக்கள் நலக் கூட்டணி என்கிற 3-வது அணி உருவாகி இருந்த நிலையில், பல சுற்று பேச்சு வார்த்தைக்குப் பின் அதில் இணைந்து கொண்டார் விஜயகாந்த். அக்கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராகவும் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். இந்தக் காலக் கட்டத்தில் விஜயகாந்த் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால், அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் காரணமாக அவரது பேச்சிலும், தோற்றத்தில் பெரும் தொய்வு ஏற்பட்டது.
இந்தத் தேர்தலில் தே.மு.தி.க 104 தொகுதிகளில் போட்டியிட்டது. முதல்வர் வேட்பாளராக உளுந்தூர்பேட்டையில் களமிறங்கிய விஜயகாந்த் டெபாசிட் இழந்தார். முடிவில் தே.மு.தி.க-வின் வாக்கு சதவீதம் 2.4 ஆக குறைந்தது. இதனிடையே தஞ்சை அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் போட்டியிட்ட தே.மு.தி.க-வின் வாக்கு சதவீதம் நோட்டாகவுக்கு கீழே சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியாயது. விஜயகாந்த்தின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைய, அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது தம்பி சுதீஷ் ஆகியோர் கட்சியின் முகமாக மாறினார். 2019 மக்களவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்ற தே.மு.தி.க-வின் வாக்கு சதவீதம் 2 ஆக சரிந்தது.
2021 சட்டமன்ற தேர்தல்
மிகப் பெரிய ஆல விருட்சமாக விரிவடைய தே.மு.தி.க, விஜயகாந்த்தின் உடல்நிலை மற்றும் தவறான அரசியல் முடிவுகளால் தடுமாற்றம் கண்டது. இதனால், 2021 சட்டமன்ற தேர்தல் வந்த போது அக்கட்சியை தி.மு.க, அ.தி.மு.க போன்ற பிரதான கட்சிகள் தங்கள் கூட்டணியில் இணைய அழைப்பு விடுக்கவில்லை. உடல்நிலை சரியில்லாத விஜயகாந்த்தை அக்கட்சியின் தலைவர்கள் சந்தித்து இருந்தாலும், கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. அதனால் தனித்து விடப்பட்ட தே.மு.தி.க, டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற கழகம் தலைமையிலான கூட்டணியில் இணைந்தது. இத்தேர்தலில் போட்டியிட்ட 60 தொகுதியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் மீண்டும் தோல்வி முகத்தை கண்டது தே.மு.தி.க. அக்கட்சியின் வாக்கு சதவீதம் 1 ஆக குறைந்து பெரும் சரிவை கண்டது.
இந்தக் இக்கட்டான காலக் கட்டத்தில், கட்சியின் அரணாக இருந்த விஜயகாந்த் உடல்நிலை மோசமடைந்து டிசம்பர் 23, 2023-ல் உயிர் நீந்தார். இதன்பிறகு விஜயகாந்த்தின் தே.மு.தி.க-வை வழிநடத்தும் முழுப் பொறுப்பையும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஏற்றுக் கொண்டார். அதேபோல், விஜயகாந்த்தின் மூத்த மகனான விஜய பிரபாகரனும் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தந்தையின் கனவை நிறைவேற்ற களப் பணியில் இறங்கினார். 2024 மக்களவை தேர்தல் வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்தது தே.மு.தி.க. அக்கட்சி போட்டியிட்ட 5 தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது.
2026 சட்டமன்ற தேர்தல்
இந்த ஆண்டு நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலுக்கும் இன்னும் ஓரிரு மாதங்களே இருக்கும் சூழலில் கூட்டணி பேச்சு வார்த்தைகள், தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஆளும் தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியும், சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியும், விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகமும் என இம்முறை தேர்தல் நான்கு முனை போட்டியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அழைப்பு வரவில்லை என்றும், யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் பிரேமலதா தெரிவித்து இருக்கிறார். அக்கட்சி எந்தக் கூட்டணியில் சேர்ந்து எத்தனை இடங்களை வெல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.





