/indian-express-tamil/media/media_files/2026/01/23/school-2026-01-23-15-21-32.jpg)
பள்ளி செல்லும் குழந்தைகள் பொதுவாக சனி -ஞாயிற்றுக் கிழமை எப்போது வரும் மழை எப்போது வரும்? கோடை காலம் விடுமுறை எப்போது வரும்? என்று தான் யோசிப்பார்கள். ஆனால், ஒரு பள்ளியில் இந்த எந்த விடுமுறையும் இன்றி ஒரு வருடத்தில் 365 நாட்களும் பள்ளி இயக்குகிறதாம். அதுவும் ஒரு மணி நேரம் இல்லை இரண்டு மணிநேரம் இல்லை 12 மணிநேரம் இந்த பள்ளி செயல்படுகிறதாம். அந்த வினோத பள்ளி எங்கு இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பள்ளி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில், திரிம்பகேஷ்வர் தாலுகாவில் உள்ள ஹிவாலி என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள ஜில்லா பரிஷத் பள்ளியாகும். இங்கு பள்ளி தினமும் 12 மணி நேரம் தொடர்ந்து இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்பறை பாடங்கள் மட்டும் அல்லாமல், வெல்டிங், மின்சார வேலைகள், இயற்கை விவசாயம் போன்ற வாழ்க்கைத் திறன் பயிற்சிகளும் கற்பிக்கப்படுகின்றன.
பாடத்திட்டத்தில் பிரார்த்தனை, தியானம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பள்ளியின் நேரம் நீளமாக இருந்தாலும், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். காலை பிரார்த்தனையுடன் தொடங்கும் பள்ளி நாள், சமூகப் பணிகள், உடற்பயிற்சி, எழுதும் பயிற்சி என தொடர்கிறது. நாளின் இறுதியில் இரண்டு முறை உணவு இடைவேளையுடன் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
எழுத்துப் பயிற்சி, வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் மாணவர்கள் தினமும் தங்களது கற்றல் திறனை மேம்படுத்தி வருகின்றனர். பள்ளியின் சுவர்களில் அழகான வார்லி ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பள்ளி நேரம் முடிந்த பிறகு மாணவர்கள் தாமே வரைந்த ஓவியங்கள். இதேபோல், கிராமத்தில் உள்ள சில வீடுகளும் இந்த ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு தினமும் இரண்டு வேளை உணவு வழங்கப்படுகிறது. மேலும், ஆன்லைன் கற்றலுக்காக யூடியூப் போன்ற தளங்களுக்கான அணுகலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/india/this-school-works-365-days-a-year-without-holidays-read-full-story-11024445





