/indian-express-tamil/media/media_files/2026/01/22/amarnath-ramakrishnan-2-2026-01-22-07-34-41.jpg)
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய துணைக்கண்டத்தில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஒரே சான்று தமிழ்நாட்டில்தான் கிடைத்துள்ளது என்றும், கீழடி என்றாலே சிலருக்கு ஏன் பயம் ஏற்படுகிறது எனத் தெரியவில்லை என்றும் காட்டமாகக் கூறினார்.
கீழடியில் இதுவரை 5 சதவீத ஆய்வுகள் கூட முடிவடையாத நிலையில், தனது முழுமையான ஆய்வு அறிக்கையை மத்திய அரசு இன்னும் வெளியிடாமல் முடக்கி வைத்திருப்பதாகவும் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறினார்.
இந்திய துணைக்கண்டத்தில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்த ஒரே இடம் தமிழ்நாடுதான்" என்று இந்திய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், கீழடி அகழாய்வு அறிக்கைகளை வெளியிடுவதில் உள்ள தடங்கல்கள் குறித்தும் தனது அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
15 லட்சம் ஆண்டுகாலத் தொன்மை
தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பை விளக்கிய அவர், "ஹோமோசேப்பியன்ஸ் இனத்தின் மரபணு கிடைத்த இடம் தமிழ்நாடு. நாம் கடந்த 60,000 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த வரலாற்று உண்மையை இன்று முழுமையாக யாரும் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்" எனத் தெரிவித்தார்.
“உண்மையை மாற்ற முடியாது”
கீழடி அகழாய்வு அறிக்கையைத் திருத்திச் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு கடிதம் அனுப்பியது குறித்துப் பேசிய அவர், "அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழைகளை வேண்டுமானால் திருத்தித் தருகிறேன், ஆனால் கண்டறிந்த உண்மைகளை ஒருபோதும் திருத்த மாட்டேன்" என ஆணித்தரமாகக் கூறினார்.
கீழடி ஆய்வை முழுமையாக முடிக்கும் முன்பே அவர் இடமாற்றம் செய்யப்பட்டதும், பல ஆண்டுகளாகியும் அவரது ஆய்வு அறிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்வி முறையில் மாற்றம் தேவை
தற்போதைய கல்வி முறையைப் பற்றி விமர்சித்த அமர்நாத் ராமகிருஷ்ணன், "நமது சங்கக் காலம் கி.மு. 300-ல் தான் தொடங்கியது என்று இன்றும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகிறது. அகழாய்வு மூலம் கிடைத்த புதிய ஆதாரங்கள் வெளிப்படையாகத் தெரியாததால்தான் வரலாற்றை அப்டேட் செய்ய முடியாமல் இருக்கிறோம். உண்மையான தரவுகளைக் கொண்டு வரலாற்றை அறிவியல் பார்வையுடன் பார்க்க வேண்டும்" என்றார்.
கீழடி என்றால் ஏன் பயம்?
"கீழடி என்றாலே சிலருக்கு ஏன் அதிர்வும் பயமும் ஏற்படுகிறது எனத் தெரியவில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக அவர்கள் பயம் கொள்கிறார்கள். இதுவரை கீழடியில் வெறும் 5 சதவீத ஆய்வுகள் கூடச் செய்யப்படவில்லை. அந்தச் சிறிய அளவிலான ஆய்வே இன்று உலகையே பேச வைத்துக் கொண்டிருக்கிறது. எனது ஆய்வறிக்கை வெளியே வந்தால், அது பின்னால் வரும் ஆய்வாளர்களுக்கு 10 ஆயிரம் புதிய ஆய்வுகளைச் செய்ய உதவியாக இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/amarnath-rmakrishnan-speech-keeladi-report-controversy-15-lakh-years-tamil-history-11020274





