வியாழன், 22 ஜனவரி, 2026

நீதிபதியின் விளக்கம் அபத்தமானது; பெ.சண்முகம் கண்டனம்

 P Shanmugam CPM State secretary questions Vijay silence as Jana Nayagan release cancelled Tamil News

சனாதன பேச்சு குறித்த வழக்கு: நீதிபதியின் விளக்கம் அபத்தமானது; பெ.சண்முகம் கண்டனம்

'சனாதன ஒழிப்பு' பேச்சு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதியின் விளக்கம் மிகவும் அபத்தமானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க தலைவர் அமித் மாளவியாவின் வன்முறை தூண்டும் பேச்சுக்கு எதிராகப் பதியப்பட்ட முதல்தகவல் அறிக்கையை ரத்துசெய்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

சனாதன ஒழிப்பு’ பற்றி தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர் சங்க மாநாட்டில் பேசியது குறித்து சமூக வலைதளத்தில் எதிர்வினை ஆற்றிய அமித் மாளவியா, ‘80% மக்களை இனப் படுகொலைக்கு ஆளாக்க சொல்கிறீர்களா?’ என்று பதிவிட்டிருந்தார். இதற்கு எதிராகவே முதல்தகவல் அறிக்கை திருச்சி நகர காவல் துறையால் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது.

அந்த முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்துள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தனி நீதிபதி, அந்தத் தீர்ப்பில் கூறியுள்ள கருத்துகள் நீதி சார்ந்ததாகவோ, சமூக யதார்த்தங்களை உள்வாங்கியதாகவோ, அரசியல் சாசனத்தின் விழுமியங்களுக்கு உட்பட்டதாகவோ இல்லை என்பதை அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறோம். மிகவும் தவறான, ஆபத்தான விளக்கத்தை நீதிபதி முன்வைத்து இருக்கிறார்.

முழு வழக்கும் ‘ஒழிப்பு’ என்ற சொல்லை சுற்றியே அமைகிறது; அந்த சொல் மிகவும் முக்கியமானது. ‘அழித்தல்’ (abolish) என்ற சொல், ஏற்கெனவே உள்ள ஏதோ ஒன்று இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கிறது. இதை தற்போதைய வழக்குக்கு பொருத்தினால், சனாதன தர்மம் இருக்கக் கூடாது என்றால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களும் இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கும்.

சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு மக்கள்குழு இருக்கக் கூடாது என்றால், அதற்கான சரியான சொல் ‘இனப்படுகொலை’ (genocide) ஆகும். சனாதன தர்மம் ஒரு மதமாக இருந்தால், அது ‘மதப்படுகொலை’ (religicide) ஆகும். மேலும், சூழல் அழிப்பு (ecocide), உண்மையழிப்பு (factocide), பண்பாட்டு அழிப்பு, பண்பாட்டு இனப்படுகொலை (culturicide) ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு முறைகள் மற்றும் தாக்குதல்களின் மூலம் மக்களை ஒழிப்பதையும் இது குறிக்கிறது.

எனவே, ‘சனாதன ஒழிப்பு’ என்ற தமிழ்ச் சொற்றொடர் தெளிவாகவே ‘இனப்படுகொலை’ அல்லது ‘பண்பாட்டு அழிப்பு’ என்பதையே குறிக்கும். இத்தகைய சூழ்நிலையில், அமைச்சரின் பேச்சை கேள்விக்குள்ளாக்கிய மனுதாரரின் பதிவை வெறுப்பு பேச்சாகக் கருத முடியாது” என்ற நீதிபதியின் மேற்கண்ட விளக்கங்கள் மிகவும் அபத்தமானது.

ஒரு பிற்போக்கு சித்தாந்தத்தை, மக்களை சாதிகளாகப் பிரித்து உயர்வு தாழ்வு கற்பிக்கும் கருத்தியலை, சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்துபவர்களுக்காக சமூக ஏற்பை விதைப்பதற்கான ஒரு கருத்தாக்கத்தை ஒழிப்பது என்பது, எப்படி அதைப் பின்பற்றுபவர்களை ஒழிப்பதாக மாறும்? அண்ணல் அம்பேத்கர் ‘சாதி ஒழிப்பு’ பேசினார்.

அதன் பொருள் என்ன? சமூகத்தில் மனிதரை மனிதர் இழிவுப்படுத்துகிற, பாகுபடுத்துகிற, வேறுபடுத்துகிற சாதி என்கிற கட்டமைப்பு உடைத்தெறியப்பட வேண்டும் என்பதுதானே. ஒழிப்பு என்பதாலேயே படுகொலைக்கான தூண்டுதல் என்று சொன்னால் ஏற்க முடியுமா? வறுமை ஒழிப்பு, லஞ்ச ஒழிப்பு என்று கூறுவதெல்லாம் சம்பந்தப்பட்ட மக்களை ஒழித்துக் கட்டுவது என்று பொருள் கொண்டால் அமைச்சர்களே இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்துவது குற்றம் என்றாகிவிடும்.

இப்படிக் கூறிய நீதிபதி "80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய சொல்கிறீர்களா?" என்று அமித் மாளவியா கேட்டது குற்றமல்ல. அவர் எழுப்பியது கேள்விதான். அவர் போராட்டம் எதையும் தூண்டவில்லை என்றெல்லாம் விளக்கம் கொடுத்து இருப்பது விந்தையாக உள்ளது.

சனாதன தர்மத்துக்கும் நால்வர்ண முறைக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா? நால்வர்ண முறை தங்களை இழிவு செய்கிறது என்று கருதுபவர்கள் அத்தகைய முறை இருக்கக் கூடாது என்று பேசக் கூடாதா? "தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது" என்று அரசியல் சாசனம் கூறியது சனாதன தர்மத்திற்கு எதிரான பிரகடனம் இல்லையா?

சனாதனம் என்றால் நித்தியமானது, அழிவற்றது என்று கூறுவதே அறிவியலுக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் தடை அல்லவா? இந்த கருத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் பெண் கல்வி சாத்தியம் ஆகி இருக்குமா? சாதாரண அலுவலக ஊழியரில் துவங்கி நீதிபதிகள் வரை பெண்கள் அமர்ந்திருப்பது சனாதன கருத்தியலை எதிர்த்த போராட்டத்தின் விளைவு தானே.

ஆகவே, இந்த தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல. நீதிபதியின் கருத்துகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, திரும்பப் பெறப்பட தேவையான நடவடிக்கைகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/judges-logic-is-absurd-cpm-leader-p-shanmugam-slams-madurai-hc-verdict-in-amit-malviya-case-11020035