உதயநிதி கருத்து ‘வெறுப்புப் பேச்சு’
/indian-express-tamil/media/media_files/2026/01/22/udhayanidhi-madurai-hc-2026-01-22-06-32-31.jpg)
இது இந்து மதத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்று குறிப்பிட்ட நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, அமைச்சரின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க நிர்வாகி அமித் மாளவியா மீது தொடரப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்து உத்தரவிட்டார்.
சனாதன தர்மம் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது "வெறுப்புப் பேச்சு" என்றும், அது "இந்து மதத்தின் மீதான நேரடித் தாக்குதல்" என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக விமர்சித்துள்ளது. அத்துடன், அவருக்கு எதிராகப் பதிவிட்ட பா.ஜ.க நிர்வாகி அமித் மாளவியா மீதான வழக்கையும் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
பின்னணி என்ன?
கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற த.மு.எ.க.ச மாநாட்டில்' பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சனாதனம் என்பது கொசு, டெங்கு, கொரோனா போன்றது; அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியானது" என்று பேசினார். இது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், டெல்லி பா.ஜ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா தனது 'எக்ஸ்' தளத்தில், "உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுக்கிறார்" எனப் பதிவிட்டிருந்தார்.
காவல்துறை நடவடிக்கை
இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் அமித் மாளவியா பதிவிட்டதாகக் கூறி, திருச்சி மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தினகரன் அளித்த புகாரின் பேரில், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் 153, 153A ஆகிய பிரிவுகளின் கீழ் அமித் மாளவியா மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமித் மாளவியா மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு ரத்து
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, புதன்கிழமை (21.01.2026) வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: 2023-ம் ஆண்டு சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் "வெறுப்புப் பேச்சு" வரம்பிற்குள் வருகின்றன. இது இந்து மதத்தின் மீதான தெளிவான தாக்குதலாகும்.
அமித் மாளவியா மீதான இந்த வழக்கை மேலும் தொடர்ந்து நடத்துவது என்பது "சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு" சமமாகும்.
எனவே, அமித் மாள்வியா மீது திருச்சி போலீசார் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்று தீர்ப்பளித்தார்.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சு மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருந்ததாகக் கூறி நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் மீண்டும் சனாதன விவாதத்தை முன்னெடுத்துள்ளது.





